பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பனையைச் சப்பும் ஒருபிள்ளை!
விரலைச் சப்பும் ஒருபிள்ளை!
தினையைக் கோதும் ஒருபிள்ளை!
கிள்ளிச் சிணுங்கும் ஒருபிள்ளை!5

மாட்டை ஓட்டும் ஒருபிள்ளை!
மனையைக் காக்கும் ஒருபிள்ளை!
வீட்டிற் சமைக்கச் சுள்ளிதனை
வெளியில் தேடும் ஒருபிள்ளை!6

வெய்யில் மழையில் வயல்வேலை!
வேண்டா மென்றால் உணவில்லை!
கையில் மிச்சக் காசில்லை!
காலம் முழுதும் இத்தொல்லை! 7

வேலிக் கறிகாய் பால்தயிரே
வெளியில் விற்றால் அரைவயிறே!
கூலிக் குழைத்தால் மாலையிலே
கூழும் வேகும் சாலையிலே! 8

அன்பும் வலிவும் சிற்றூரில்!
அடக்கம் வாய்மை சிற்றூரில்!
வம்பும் தும்பும் பேரூரில்!
வழிப்பறி கொள்ளை பேரூரில்! 9

உழைத்துத் தேய்ந்து பேருரை
உயர்த்தி வாழ்வோர் சிற்றூரார்!
கொழுத்த சோம்பர் சிற்றூரைக்
‘குப்பைக் காடெ’னக் கூறுவரே! 10


24 ♦ கவிஞர் வாணிதாசன்