இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குட்டை குளத்தில் ஆணினங்கள்
குதித்துக் குளித்தே ஆடுதல்போல்
சட்டி நீரில் புறாக்கூட்டம்
குளித்துத் தலையுடல் நீராட்டும்! 5
கூண்டைத் தாவும் ஒருபெட்டை!
‘குடுகுடு’ப் பாடும் ஒருவட்டை!
கூண்டுக் கூரை மேல்நின்று
கூவத் தாவும் மற்றொன்று! 6
கூண்டைக் கட்டும் பெண்புறவு!
கூட உதவும் ஆண்புறவு!
கூண்டைக் கட்டி முடித்தவுடன்
கோலிக் குண்டே இருமுட்டை! 7
முட்டை காக்கும் தாய்ப்புறவு!
முறைமுறை மாற்றும் ஆண்புறவு!
முட்டை அளித்த சிறுகுஞ்சு
நனைந்த உருண்டை வெண்பஞ்சு!8
உண்ட உணவைக் குஞ்சுக்குக்
கொண்டுவந் தூட்டும் நெஞ்சுக்குள்
உண்ட பின்னும் புறாக்குஞ்சும்
ஒளிவாய் திறந்து தாய்க்கொஞ்சும்! 9
குழந்தை இலக்கியம் ♦ 69