பக்கம்:குழந்தை உலகம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்மான் பெருமை

19



எண்ணெய் தலைமுழுகி ஏகாந்தப் பொட்டுமிட்டு
வண்ணக்கவி பாடிவரும் மன்னர் மருமகனோ !
மானா மதுரையிலே மாடுவிற்கும் சந்தையிலே
மாட்டுவிலை கூறவந்த மந்திரியோ உங்களம்மான் !
செஞ்சட்டை தொட்டுச் சிவப்புச்சட்டை மேல்போட்டுப்
பொன்சட்டைக் காரரோ பிள்ளையுடை அம்மான்மார் !
உசந்த தலைப்பாவும் உல்லாச வல்லவாட்டும்
நிறைந்த தலைவாசலிலே நிற்பார் மருமகனோ !

பெண்களுக்குப் பிறந்தகத்தின் பெருமையைச் சொல்லிக்கொள்ள எத்தனை ஆசை ! தனக்குப் பிறந்த குழந்தைக்குத் தொட்டிற் பருவத்திலேயே அம்மான் புகழைப் பாடி அறிவுறுத்தும் தாய்க்கு எங்கிருந்துதான் வர்ணனை சுரக்கிறதோ ! எங்கிருந்துதான் கற்பனை வருகிறதோ ! குழந்தை பாட்டுக் கேட்கும் “தொட்டிற் பழக்கத்”திலே ஊறி வளர்கிறது. தமிழ் நாட்டுக் குழந்தைகள் தாய்மாரின் தாலாட்டுப் பாட்டிலும் அம்மான்மார் மகிமையிலும் இன்பம் கண்டு தூங்குகின்றன. அந்தப் பாட்டிலுள்ளே மிளிரும் அன்பையும் உணர்ச்சியையும் குழந்தைப் பிராயத்திலே நம்மால் உணர முடியாவிட்டாலும், இப்பொழுதாவது நாம் உணர்ந்து இன்பம் பெற முயல வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/28&oldid=1047391" இலிருந்து மீள்விக்கப்பட்டது