பக்கம்:குழந்தை உலகம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6. நிலாப் பாட்டு

நிலாவைக் கண்டால் கவிஞர்களுக்குக் கொண்டாட்டம்; காதலர்களுக்குக் கொண்டாட்டம், இலக்கியங்களில் கவிஞர்கள் சந்திரனைப் படுத்தி வைக்கும் பாடு ஒன்றல்ல, இரண்டல்ல. காவியம் செய்ய வேண்டுமானால் அதில் சில வருணனைகள் அவசியம் அமைய வேண்டுமாம். சந்திரன் உதயமாகும் அழகை வருணிக்கவேண்டும். காதலனும் காதலியும் நிலாவினால் துன்புறவேண்டும். ஒருவரை ஒருவர் காணாமையால் அவர்களுக்கு விரகதாபம் அதிகமாகிவிடும். சந்திரன் விஷப்பிண்டமாகத் தோற்றுவான். நிலா அக்கினிப் பிழம்பாகத் தகிக்கும். சந்திரனைக் காதலனும் காதலியும் ஒரு மூச்சு வையத் தொடங்கி விடுவார்கள். இதைச் “சந்திரோபாலம்பனம்” என்று சொல்வார்கள்.

நிலாவினால் விளையும் இந்த நிகழ்ச்சிகளைக் கவி உலகத்திலேதான் காணமுடியும். உண்மையான உலகத்தில் நிலா எல்லோருக்கும் இன்பத்தை அளிக்கிறது. குழந்தைகளுக்கு அபரிமிதமான களிப்பை உண்டாக்குகிறது. கிராமங்களில் நிலாக்காலங்களில் சிறு குழந்தைகள் கூடிக் கொண்டு தெருவில் சின்னச் சின்ன மண் வீடு கட்டி விளையாடுகிறார்கள். சிற்றில் இழைத்துச் சிறுசோறு சமைத்து மண்விருந்தை வழங்குகிறார்கள். அவர்கள் விளையாட்டாக நிகழ்த்தும் அந்த நாடகத்தில் அவர்களுக்கு எல்லையில்லாத இன்பம் உண்டாகிறது. குழந்தைகளின் இயல்பை உணர்ந்து இன்புறும் உள்ளம் படைத்தவர்களுக்கும் அந்த ஆனந்தத்தில் பங்கு உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/35&oldid=1047437" இலிருந்து மீள்விக்கப்பட்டது