பக்கம்:குழந்தை உலகம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிலாப் பாட்டு

27

 சந்திரன் சின்னஞ்சிறு குழந்தைகளின் உள்ளத்தில் இன்பத்தைப் பாய்ச்சுகிறான், குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டி மகிழ்வித்தல் தாய்மார்களின் வழக்கம். பிள்ளைத் தமிழ்களில் “அம்புலிப்பருவம்” என்ற ஒரு பகுதி உண்டு. குழந்தை அழுதால், தாய் நிலாவைக்காட்டிச் சமாதானம் செய்கிறாள். ஒரு பருக்கை கூட உண்ணாத குழந்தைக்கு நிலாவைக் காட்டியும், பாட்டுப் பாடியும் தாயானவள் சோற்றை ஊட்டி விடுகிறாள். பாலுஞ் சோற்றையும், தயிருஞ்சோற்றையும் குழந்தைக்கு நிலாவைக் காட்டி ஏமாற்றி ஊட்டிவிடுகிறாள். குழந்தையும் தண்ணிலாக் காட்சியிலும், பாட்டிலும் மயங்கிப் போகிறதென்றுதான் சொல்லவேண்டும். அதன் வயிறு நிரம்பும்படி செய்வதற்கு நிலா உறுதுணையாக உதவுகிறது.

நிலாவும் பாட்டும் குழந்தையை வளர்க்கின்றன. அதன் இளைய உள்ளத்திலே இயற்கைத் தேவியின் செளந்தரியமும் இன்னிசையும் புகுகின்றன. மனிதன் உண்டாக்கிய வர்ணப் பொம்மைகளைக் காட்டிலும் இறைவன் உண்டாக்கிய சந்திரனென்னும் பொம்மை அதன் உள்ளத்தை வசப்படுத்துகிறது. நிலாவுக்கு மோகனசக்தி உண்டென்பதற்கு இலக்கியத்தில் ஆதாரம் தேடவேண்டாம். கண்முன்னால் நிகழும் இந்த நிகழ்ச்சியே சிறந்த உதாரணம்.

தாய் குழந்தைக்கு விளையாட்டுத் தோழனாகச் சந்திரனை அழைக்கிறாள். வெள்ளிய நிலா, வெள்ளிக்கிண்ணம், வெள்ளிய பாலுஞ்சோறு—இந்த இணைப்பில் தாய் வெள்ளிய மல்லிகைப் பூவை நினைக்கிறாள். எல்லாம் வெள்ளைமயம் ! அதிலே கூடக் கலை நயம், அம்ம! தமிழ் நாட்டில் குழந்தைக்குப் பாலூட்டுகையிலே கலையையும் ஊட்டும் தாய்மார்கள் இருந்தார்கள்!—இந்தத் தாய்மரபு மாறாமல், நிலைகுலையாமல் இருக்குமா?.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/36&oldid=1047440" இலிருந்து மீள்விக்கப்பட்டது