பக்கம்:குழந்தை உலகம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

குழந்தை உலகம்

 நிலாவைத் தன் குழந்தையோடு விளையாட ஓடிவரும்படி அழைக்கிறாள் தாய். மல்லிகைப்பூக் கொண்டுவரச் சொல்கிறாள். பாட்டுப் பாடும் பொழுதே கையை நீட்டி நிலாவைச் சுட்டிக் காட்டுகிறாள். குழந்தையும் கையை நீட்டுகிறது. நிலாவைப் பார்க்கிறது. இந்தத் தருணம் பார்த்துத் தாய் பாட்டில் பாலுஞ்சாதத்தைக் கொண்டுவந்து முடித்துக் குழந்தையின் வாயிலும் அதை ஊட்டி விடுகிறாள். என்ன சாமர்த்தியம்!

நிலா நிலா வாவா
நில்லாமல் ஒடிவா
மலை மேலே ஏறி வா
மல்லிகைப் பூக் கொண்டுவா
நடு வீட்டில் வையே நல்ல துதி செய்யே
வெள்ளிக் கிண்ணத்தில் பாலுஞ் சோறும் பிசைந்து
அள்ளி எடுத்து அப்பன் வாயில்
கொஞ்சிக் கொஞ்சி ஊட்டு
குழந்தைக்குச் சிரிப்புக் காட்டு !

நிலாவை அழைப்பதோடு தாய் சிற்பதில்லை. காக்கையையும் குருவியையும் கிளியையும் கூட அழைக்கிறாள். எப்படியாவது போக்குக் காட்டிக் குழந்தைக்குச் சோறு ஊட்டும் தந்திரத்தைக் கற்றிருக்கிறாள் அவள். பாட்டிலே ராக விசேஷம் இல்லை. தாள நயம் மாத்திரம் அமைந்திருக்கிறது. குழந்தை அசைந்து ஆடுவதற்கு அந்தத் தாள இயல் உதவியாக இருக்கிறது.

காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா !
குருவி கொண்டைக்குப் பூக் கொண்டுவா !
கொக்கே குழந்தைக்குத் தேன் கொண்டு வா!
கிளியே கிண்ணத்தில் பால் கொண்டு வா!
அப்பா முன்னே வாருங்கள் அழாதே என்று சொல்லுங்கள்!

சோறு ஊட்டும்போது வேறு விதமான பாடல்களையும் தாய் பாடுகிறாள். சாதத்தைப் பற்றியே பாட்டுப் பாடுகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/37&oldid=1047452" இலிருந்து மீள்விக்கப்பட்டது