பக்கம்:குழந்தை உலகம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தை உலகப் பாடல்கள்

37

 யான் பெண்டாட்டி விளையாட்டில் அந்த எண்ணம் உருப்பெறுகிறது. மரப்பாச்சியைக் குழந்தையாகப் பாவித்து அதைச் சீராட்டித் தாலாட்டிக் கொஞ்சும்போது குழந்தைக்கு உள்ள ஆசை வெளிப்படுகிறது. பெரியவர்கள், குழந்தைகள் எதிர்கால வாழ்க்கையில் என்ன வேலை செய்தாலும், எந்தப் பதவியை அடைந்தாலும், கல்வி கற்றாலும், செல்வம் ஈட்டினாலும், கல்யாணம் செய்து கொண்டு பிள்ளை குட்டிகளுடன் வாழ்வதை மாத்திரம் முன்னாலே நினைப்பூட்டுகிறார்கள். மனித வாழ்க்கையில் எல்லோருக்கும் பொதுவான காரியம் இது. கல்வி, செல்வம், உத்தியோகம் என்பவை ஒவ்வொருவருக்கும் வேறு வேறு விதமாக அமைகின்றன. அன்றியும் குடும்ப பாரத்தைக் கண்டு அஞ்சாமல் இருக்க இளம் பிராயத்திலிருந்தே அந்த நினைவை ஊட்டி அதில் ஒரு கெளரவ புத்தி உண்டாகும்படியாகச் செய்ய வேண்டுமென்று நினைத்திருக்கக் கூடும். ஆதலால் அவர்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் சாரமாகப் போதிக்கும் பின்வரும் பாட்டு அந்த நினைப்புக்கு ஏற்றதாகவே அமைந்திருக்கிறது.

அத்தைமகள் உத்தமியைக் கொள்ளவே வேணும்
அழகான சிறுதாலி கட்டவே வேணும்
கடவுளைப் பல நாளும் தொழவே வேணும்
கலிதீரப் பிள்ளையைப் பெறவே வேணும்
குலம்விளங்கக் கிருஷ்ணாவென்று அழைக்கவே வேணும் ::::குதலைச்சொல் கேட்டுமிக மகிழவே வேணும்
வருத்தம்நோய் இல்லாமல் வளரவே வேணும்
வாழையடி வாழையாய் வாழவே வேணும் !
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/46&oldid=1047656" இலிருந்து மீள்விக்கப்பட்டது