பக்கம்:குழந்தை உலகம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



9. கல்லாங்காய் விளையாட்டு
1

அழகிய சிறுமிகள் கூடி விளையாடும் அந்தக் கூட்டத்திலே அவள் தனி அழகோடு விளங்குகிறாள். அவளுக்கு எட்டு அல்லது ஒன்பது வயசு இருக்கலாம். வளப்பமும் வனப்பும் பொருந்திய அவள் முகத்தில் ஒரு களை இலங்குகிறது. பாவாடையும் தாவணியும் அணிந்து நெற்றியில் அழகிய திலகமும் உடம்பில் ஆபரணங்களும் பூண்டு அமர்ந்திருக்கிறாள்.

அவளுக்கு நாணம் இருப்பதாகத் தோன்றவில்லை. முழுவதும் நாணமே இல்லாதவள் என்று சொல்லவும் முடியாது. சிறுமியர் கூட்டத்திடையே அவள் கலகலப்பாகப் பேசுகிறாள்; சிரிக்கிறாள்; பாடுகிறாள். ஆடவர்கள் வந்தால் எழுந்து ஒடுவதில்லை. ஆனாலும் அவ்வளவு கலகலப்பாகப் பேசுவது இல்லை. அவளுக்குத் தான் பெண் என்ற ஞாபகம் ஒரளவு வந்திருக்கிறது. ஆயினும் விளையாட்டின் மேல் உள்ள ஆசை நீங்கவில்லை.

அவளுடைய பருவத்தைப் பெதும்பைப் பருவமென்று தமிழ்ப் புலவர்கள் சொல்வார்கள். நாற்பது வயசுக்கு உட்பட்ட பெண்களின் பருவங்களே ஏழாக அவர்கள் பிரித்திருக்கிறார்கள். ஐந்து வயசு முதல் ஏழு வயசு முடியப் பேதைப் பருவம்; எட்டு முதல் பதினொன்று வரையில் பெதும்பை ; பன்னிரண்டும் பதின்மூன்றும் மங்கைப் பருவம்; பதினான்கு பிராயம் முதல் பத்தொன்பது முடிய மடந்தை; இருபது முதல் இருபத்தைந்து முடிய அரிவை; இருபத்தாறு முதல் முப்பத்தொன்று முடியத் தெரிவைப் பருவம்; அதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/52&oldid=1047689" இலிருந்து மீள்விக்கப்பட்டது