பக்கம்:குழந்தை செல்வம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

குழந்தைச் செல்வம்


கறவைப் பசுவை அதன்
      கன்று சுற்றித் துள்ளுது பார்!
பால் குடிக்க வேண்டாமோ?
      பழம் தின்ன வேண்டாமோ? 4

பாடங்கள் எல்லாம்
      படித்திட வேண்டாமோ?
சீக்கிரம் பள்ளிக்குச்
      சென்றிட வேண்டாமோ? 5

காலையும் ஆச்சுதையா!
      கண்விழித்துப் பாரையா!
அப்பா! எழுந்திரையா!
      அரசே ! எழுந்திரையா! 6

4. காலைப் பாட்டு

அருணன் உதித்தனன்; அம்புஜம் விண்டது;
      அளிகளும் மொய்த்தன ; பாராய்!
      அம்மா ! நீ எழுந்தோடி வாராய்! 1

பசிய புல் நுனியில் பதித்த வெண் முத்தமோ?
      பனித்துளி தானோ? நீ பாராய்!
      பைங்கிளி! எழுந்தோடி வாராய்! 2

பொழுது விடிந்தது; பொற்கோழி கூவிற்று:
      பூஞ்செடி பொலிவதைப் பாராய்!
      பொன்னே! நீ எழுந்தோடி வாராய்! 3

காகம் கரைந்தது; காலையும் ஆயிற்று;
      கனியுதிர் காவினைப் பாராய்!
      கண்ணே ! நீ எழுந்தோடி வாராய்! 4