பக்கம்:குழந்தை செல்வம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

குழந்தைச் செல்வம்


துன்பமிகத் தாமடைந்தும், வெண்ணிலாவே! - பிறர்க்குச்
சுகமளிப்பார் உன்போலுண்டோ? வெண்ணிலாவே! 18


இருளதனை விழுங்கவல்ல வெண்ணிலாவே! -உன்னை
இருள்விழுங்கும் சூழ்ச்சியெதோ? வெண்ணிலாவே! 19

23. மலர்கள்-I

பூமகளின் புன்னகைபோல்
      பூத்திடு வோமே! - கம்பன்
பாமணக்குந் தமிழினைப் போல்
      பரிமளிப் போமே ! 1

வண்ணவண்ணச் சேலைகட்டி,
      மகிழ்ந்திருப் போமே! - இந்த
மண்ணகமும் விண்ணகமாய்
      மாறச் செய்வோமே! 2

மங்கையர்க்கும் ஆடவர்க்கும்
      மணமுடிப் போமே! - மன்னர்
தங்கமுடி மீதும் நாங்கள்
      தங்கி வாழ்வோமே! 3

கரும்பினிலும் இனியரசம்
      கருதி வைப்போமே! - அதை
விரும்பிவரும் நண்பருக்கு
      விருந்தளிப் போமே! 4

ஈசனருள் வேண்டி நிதம்
      இணையடி போற்றி - நல்ல
வாசமெழு தூபதீபம்
      வழங்கி நிற்போமே! 5