பதிப்புரை
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் கவிதைகளில் சிறுவர் சிறுமியர்க் கேற்ற பாடல்கள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இக் கவிதைகள், 'மலரும் மாலையும்' 'ஆசிய ஜோதி' முதலிய கவிதைத் தொகுதிகளில் ஏற்கெனவே வெளிவந்தவை. அவைகள் பெருந்தொகுதிகளாயிருத்தலால், பள்ளிச்சிறுவர் சிறுமியர்கள் எளிதில் பெற்று வாசிக்க இயலாதிருந்தது. கவிமணி அவர்களின் கவிதைகளை மாணவருலகமும் படித்துப் பயனுறவேண்டும் என்பது கருதி, இக் குழந்தைச் செல்வம்' இப்பொழுது வெளிவருகிறது.
குழந்தைகளுடன் வாழ்ந்து, குழந்தைகளுக்கான எளிய இனிய பாடல்களைப் பாடி அளித்து, தமிழ் நாட்டில் குழந்தைகளுக்கேற்ற பாடல்கள் வெளிவருவதற்கு வழிகாட்டியவர் நமது கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களே. அவர்களுடைய வழியைப் பின்பற்றி, பலரும் இப்பொழுது குழந்தைப் பாடல்கள் பாடி வருகிறார்கள்.
குழந்தைகள் தாமே விரும்பிக் கற்கும் வண்ணம் அத்தனை எளிமையுடனும் இனிய ஓசையுடனும் இப் பாடல்கள் அமைந்துள்ளன. குழந்தைகள் பாடி நடிப்பதற்கும் இப்பாடல்களில் பல ஏற்றவைகளாகும். குழந்தைப் பாடல்கள், 'மழலை மொழி', 'இயற்கை இன்பம்' 'காட்சி இன்பம்', 'கதைப் பாட்டு','பஞ்சாமிர்தம்' என ஐந்து பகுதிகளாகத் தொகுக்கப்பெற்றிருக்கின்றன.
செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர் அனைவரும் கவிமணி அவர்கள் தரும் 'குழந்தைச் செல்வத்தை'ப் பெற்றுப் படித்து மகிழ்வார்களாக.
பாரி நிலையம் 8-4-54 |
பாரி நிலையத்தார் |