பக்கம்:குழந்தை செல்வம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


43. திருவள்ளுவர்

இம்மை மறுமையின் - பயன்கள்
     எவருமே யடையச்
செம்மை நெறியினை - விளக்கும்
     தெய்வ நூல் செய்தோன். 1

வழுக்கள் போக்க வந்தோன் - நல்ல
     வாழ்வை ஆக்க வந்தோன்;
ஒழுக்கம் காட்ட வந்தோன் - தமிழுக்கு
     உயிரை ஊட்ட வந்தோன். 2

அறிவின் எல்லை கண்டோன் - உலகை
     அளந்து கணக்கிட் டோன்;
தறியில் ஆடை நெய்தோன் - தமிழில்
     தரும நூல் நூற்றோன். 3

சாதி ஒன்றேயாம் - தமிழர்
     சமயம் ஒன்றேயாம்
நீதி ஒன்றேயாம்-என்று
     நிலை நிறுத்தி நின்றோன். 4

44. கம்பன்

ஆரியம் நன்குணர்ந்தோன் - தமிழின்
     ஆழம் அளந்து கண்டோன்;
மாரி மழைபோலக் - கவியின்
     மழைபொ ழிந்திடு வோன். 1

உலக உண்மைகளை - எவரும்
     உணரக் கூறிடு வோன்;
அலகி லாக்கலைகள்-உறையும்
    ஆலய மாகிடு வோன்.