பக்கம்:குழந்தை செல்வம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஞ்சாமிர்தம்

53


ஆழக்குக் காணம் அளித்திடுவீர் - அதற்கு
      ஆயிரம் வேலையும் இட்டிடுவீர்;
ஏழைக் கிரங்கெனும் நீதிமொழி - நீங்கள்
      ஏட்டில் படித்ததை ஏன்மறந்தீர்? 9

சித்தம் இரங்கிட வேண்டுகின்றோம் - எம்மை
      க்ஷேமமாய்க் காத்திடக் கெஞ்சுகின்றோம்;
புத்த முனியருள் போதனையை - என்றும்
      போற்றுதல் உங்கள் கடனாமே. 10

47. வாழ்க்கைத் தத்துவங்கள்

நாமே நமக்குத் துணையானால்,
     நாடும் பொருளும் நற்புகழும்
தாமே நம்மைத் தேடிவரும்;
     சற்றும் இதற்கோர் ஐயமுண்டோ? 1

நெஞ்சிற் கருணை நிறைந்தவர்க்கு,
     நேயம் கொண்ட நெறியோர்க்கு,
விஞ்சும் பொறுமை யுடையவர்க்கு.
     வெல்லும் படைகள் வேறுளவோ? 2

உள்ளந் தேறிச் செய்வினையில்
     ஊக்கம் பெருக உழைப்போமேல்,
பள்ளம் உயர்மே டாகாதோ?
     பாறை பொடியாய்ப் போகாதோ? 3

கால நதியின் கதியதனில்
     கடவுள் ஆணை காண்பீரேல்,
ஞால மீது சுகமெல்லாம்
     நாளும் அடைந்து வாழ்வீரே! 4