பக்கம்:குழந்தை செல்வம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


48. தைப் பொங்கல்

பொங்கல்! இன்று பொங்கல்!
     புதுவருஷப் பொங்கல்!
மங்கலங்கள் பொங்க
     மனையிலிடும் பொங்கல்! 1

சந்தனத்தைக் குழைத்துத்
     தரையைமெழு கிடுவோம்;
சிந்துரத்தாற் கோலம்
     சேர அதில் அமைப்போம். 2

எங்கள் கண பதியை
     எழுந்தருளச் செய்வோம்;
மங்கலநற் பொருள்கள்
     வரிசைகொள வைப்போம். 3

வாசமிக வீசும்
     மலர் எடுத்து வருவோம்;
நேசமொடு தூவி
     நின்றுதொழு திடுவோம். 4

தலைகள் விரித் திடுவோம்;
     இளநீர்கள் வைப்போம்;
குலைகுலையாய்க் கனிகள்
     கொண்டுவந்து வைப்போம். 5

பச்சைமஞ்சள் இஞ்சி
     படைபடையாய் வைப்போம்
இச்சைதரு கரும்பும்
     இடையிடையே நடுவோம். 6