பக்கம்:குழந்தை செல்வம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஞ்சாமிர்தம்

63


நெற்றியின் வியர்வை - நிதமும்
     நிலத்தில் வீழ்ந்திடிலே
சற்றும் வாடாமல் - சுதந்திரம்
     தழைத்து வருமப்பா! 3

ஜாதிச் சண்டையெலாம் - ஓய்ந்து
     தணிய வேண்டுமப்பா!
நீதி நாடெங்கும் - நிலைத்து
     நிற்க வேண்டுமப்பா! 4

உலக மக்களெலாம் - அன்பொடு
     ஒருதாய் மக்களைப்போல்
கலக மின்றிவாழும் - காலம்
     காண வேண்டுமப்பா! 5

57. நாட்டுக்கே உழைப்போம்

நெற்றி வியர்வை நிலத்தில் விழஉழைப்போம்;
பெற்ற சுதந்திரத்தைப் பேணுவோம்; சுற்றமெனப்
பன்னாட்டு மக்களையும் பாராட்டிப் பாரதமா
நன்னாட்டில் வாழுவோம் நாம். 1

பத்தியொடு தெய்வம் பணிந்திடுவோம்; பாரதத்தாய்
சித்தம் களிப்படையச் செய்திடுவோம்; ஒத்துழைத்துப்
பெற்ற சுதந்திரத்தைப் பேணிடுவோம்; பேருலகில்
நற்றவம் ஈதால் நமக்கு. 2

வாணிகம் செய்வோம்; வயலிற் பயிர் செய்வோம் :
காணரிய கைத்தொழிலும் கண்டு செய்வோம்; பேணிநம்
சந்தத் தமிழ்வளர்ப்போம்; தாய் நாட்டுக்கே உழைப்போம்;
சிந்தை மகிழ்ந்து தினம். 3