பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12. அறிவிலே ஆசை

'ஞ்சாவூர்ப் பெரிய கோயிலிலே ஒர் அற்புதமான கோபுரம் இருக்கிறது. மிகப் பெரிய கோபுரம். ஆனால் அதை ஒரு கையகலக் காகிதத்திலே போட்டோ எடுத்துவிடலாம். அந்தக் கோபுரத்தின் பெரிய வடிவைச் சிறிய அளவில் அந்தப் போட்டோ காண்பிக்கும். இதைப்போலக் குழந்தையையும் வயது முதிர்ந்த ஒரு மனிதனுடைய சிறிய போட்டோ என்று நினைப்பது முற்றிலும் சரியல்ல. குழந்தையிலிருந்துதான் மனிதன் உருவாகிறான். அந்தக் குழந்தைப் பருவத்திலேயே முழு மனிதனுடைய பல தன்மைகள் விதை போன்ற நிலேயிலே மறைந்து நிற்கின்றன. அப்படியிருந்தாலும் வயது முதிர்ந்தவனிடம் நாம் எதிர்பார்க்கும் நடத்தை முதலியவைகளைக் குழந்தைகளிடம் எதிர்பார்க்கக்கூடாது. குழந்தையின் உலகமே வேறு. அதன் எண்ணங்களும், கற்பனைகளும் பலவகைகளில் தனிப்பட்டவை.

பெரிய சத்தத்தைக் கேட்டால் குழந்தை பயப்படுகிறது என்று சொன்னோம். இந்தப் பயம் பிறவியிலேயே அதற்கு இயல்பாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இதைப்போல இயல்பாக அமைந்துள்ளவற்றிற்கு இயல் பூக்கம் என்று பெயர். மனிதனிடத்திலே பல இயல்பூக்கங்கள் இருக்கின்றன. அவற்றிலே சில குழந்தைப் பருத்திலே மிகச் சிறப்பாக வெளித் தோன்றும் எதையும் பார்த்து அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையை மூட்டும் ஒரு இயல்பூக்கமும் இருக்கின்றது. அதற்கு விடுப்பு (Curiosity) என்று பெயர். குழந்தைப் பருவத்திலே இந்த இயல்பூக்கம் மிகத் தீவிரமாக இருக்கும்.