பக்கம்:கூடி வாழ்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

விடுதலை பெற்ற இந்திய நாடு எத்தனையோ துறைகளில் முன்னேற வேண்டியுள்ளது. சிறப்பாகக் கல்வியில் பிற்போக்கான நிலைமை போகவேண்டும். பிள்ளைகள் மட்டுமல்லாது பெரியோர்களும் படிக்க வேண்டும். நாட்டில் படித்தவர்களெல்லாம் இத்துறையில் பணியாற்ற வரவேண்டும்; அரசாங்கம் கல்வித் துறைக்குக் கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டிக் குவிக்கின்றது. ஆண்டுதோறும் வளர்ச்சி உண்டேனும் செலவுக்குத் தகுந்த பயன் இல்லை; ஆசைக்கு ஏற்ற அளவு இல்லை. ஆகவே நாம் இன்னும் முயன்று நாட்டுக் கல்வியை வளர்க்க வேண்டும்.

கல்லாத வயது வந்தோருக்கு எளிதில் விளங்கும்படி, சிற்சில நூல்கள் எழுதவேண்டுமென்று விரும்பினர் என் நண்பர்கள். இத்துறையில் நல்ல நூல்கள் வரவேண்டும். சாதாரணமாக எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்றுக்கொண்ட முதியவர் அந்த நிலையிலே சில நூல்களைப் படித்துப் பல உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த முறையில்தான் இச்சிறு நூல் வெளிவருகின்றது.

இந்நூல் எளிய நடையில் நாட்டு மக்கள் கூடி வாழ வேண்டிய அவசியத்தை வற்புறுத்துவது; வினாவும் விடையும் கலந்து பொருளை விளக்குவது.

நாட்டில் ஒற்றுமை இல்லாமையே அதன் வளர்ச்சியைத் தடை செய்கிறது என்பதை அறிவோம். எனவே தான் இந்த ஒற்றுமை உணர்ச்சி வளர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்நூலை எழுதி வெளியிட்டேன். என் எண்ணம் ஈடேறும் என்று நம்புகிறேன்.

சென்னை-30

ஆசிரியன்
அ. மு. ப.

10—4—57
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கூடி_வாழ்.pdf/5&oldid=1301243" இலிருந்து மீள்விக்கப்பட்டது