பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஆட்டத்திற்குள் வந்து, பொருளை எடுக்கும் முயற்சியில் தோற்றுப் போனவர். தன் இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு, ஐந்து தோப்புக் கரணம் போட்டபின்னர், காவல்காரனாக மாறி ஆட்டத்தைத் தொடங்கச் செய்ய வேண்டும்.

காவல் காரன் ஏமாந்து, பொருளை மற்றவர்கள் எடுத்துச் சென்றுவிட்டாலும், தன் முயற்சியில் தோற்றதற்காக, முன்னவர் போல 5 தோப்புக் கரணங்கள் போட்டு அவரே காவல் செய்வதுடன் மீண்டும் ஆட்டம் தொடங்கும்.

வட்டத்திற்குள் வந்துவிட்டால் கூட, ஆளைத் தொட்டுவிட காவல்காரனுக்கு உரிமை உண்டு.

42. நரியும் வாத்துக்களும்

அமைப்பு:

ஆடுவோர்களில் ஒருவரை நரியாகவும், மற்றவர் களை வாத்துக்களாகவும் உருவகப்படுத்தியவாறு இவ்விளையாட்டை ஆடலாம்.

ஆடுவதற்கு அதிகமானவர்களைச் சேர்க்காமல் 10 அல்லது 12 பேர் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்ளவும்.

வாத்துக்கள் எல்லாம், தாய் வாத்தாக இருப்பவரின் இடுப்பை ஒவ்வொருவரும் பற்றியவராக வரிசையாக நிற்க, கடைசியில் நிற்கும் இளைய வாத்தையே குறிபார்த்து நரி சுற்றிச் சுற்றி வரவேண்டும்.