பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடில நாடு

115


தெற்றநடு ஆர்ந்து இரண்டு சீரும்மலிந்து ஓங்குகின்ற
திறத்தாற் போலும்"

இப் பெயர்க் காரணம் மிகவும் பொருத்தமாகப் புலப்படுகிறது. இந்நாடு, வீரபாண்டியன் காலத்துக் கல்வெட்டில்,

"நடுவில் மண்டலத்துத் திருமாணிக் குழி"

என ‘நடுவில் மண்டலம்’ என்பதாய்க் குறிப்பிடப்பட்டிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. நடுவில் மண்டலம் என்பதற்கு, நடுவே உள்ள நடுநாடு என்பதாகத்தான் பொருள் இருக்க வேண்டும்.

திருமுனைப்பாடி நாடு

அடுத்து, திருமுனைப்பாடி நாடு என்பதின் பெயர்க் காரணம் வருமாறு:

திருமுனைந்து ஆடும் நாடு - அஃதாவது - திருமகள் மிகுந்த சிறப்புடன் வாழும் நாடு என்ற பொருளில் (திருமுனைப்பு ஆடி நாடு) திருமுனைப்பாடி நாடு எனப் பெயர் பெற்றிருக்கலாம் எனச் சிலர் கூறகின்றனர், இந்தக் காரணம் பொருத்தமானதாய்ப் புலப்படவில்லை. முனை என்பது போர் முனையை - போர்க் களத்தைக் குறிக்கும்; பாடி என்றால் பாசறை - போர் மறவர்கள் தங்கியிருக்கும் இடம். எனவே, முனைப்பாடிநாடு என்றால், போர்கள் பல நடந்த நாடு - போர் முனைகள் மிக்க நாடு - போர் மறவர்கள் நிறைந்த நாடு எனப் பொருள்படும். திரு என்பது மங்கலச் சொல், இப்படியாக - இந்தப் பொருளில் திருமுனைப்பாடி நாடு என்னும் பெயர் உருவாயிற்று என ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இதுதான் பொருத்தமாய்த் தோன்றுகிறது.

இந்த நாடு தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவில் இருப்பதால் வடபுல மன்னர்களும் தென்புல மன்னர்களும் பலமுறை இங்கே மோதிக்கொண்டிருக்கலாம்; முடியுடை மூவேந்தர்கள் துணைவேண்டிய போதெல்லாம் மலையமான் மரபினர் மிக்க படை வீரர்களுடன் சென்று உதவியதாய் அறியப்படுதலின், பயிற்சியும் பட்டறிவும் மிக்க போர் மறவர்கள் மிகப் பலர் இங்கே இருந்திருக்க வேண்டும்; எனவே, இந்நாடு முனைப்பாடி என்னும் பெயருக்கு ஏற்றதே. மற்றும், இந்நாடு நடுநிலை நாடாக இருந்ததால், ஒருவர்மேல் ஒருவர் படையெடுத்துச் சென்ற மன்னர் பலரின் படைகள் வழியில் இந் நாட்டைப் பாடிவீடாகக் கொண்டு தங்கி இளைப்பாறுவதும் வழக்கமாயிருந்திருக்கலாம்; இதனாலும்