பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

கெடிலக்கரை நாகரிகம்


இந் நாட்டிற்குத் திருமுனைப் பாடிநாடு என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

திருமுனைப் பாடிநாடு என்பதற்கு எத்தனை பெயர்க் காரணங்கள் கூறினாலும் அத்தனையும் மலையமான்களை மையமாகக் கொண்டே சுற்றிச் சுற்றி வருவனவாயுள்ளன. கெடிலமும் தெண்பெண்ணையும் பாயும் இத் திருமுனைப் பாடி நாட்டைப் புலவர்கள் மிகவும் சிறப்பித்துப் பாடியுள்ளனர். “நல்லொழுக்கம் மிக்க குடிமக்களையும் வளஞ்சிறந்த ஊர்களையும் உடையது திருமுனைப்பாடி நாடு, திருநாவுக்கரசரும் சுந்தரரும் பிறந்த சிறப்புடையது திருமுனைப்பாடி நாடு என்றால், இதற்குமேல் அதற்கு இன்னும் வேறு பெருமை கூறவியலாது” என்னும் கருத்தில் சேக்கிழார் பெரிய புராணத்தில்,

[1]"கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடிமேல் வைத்த
அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு
மங்கையர் வதன சீத மதியிரு மருங்கும் ஓடிச்
செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப் பாடி நாடு"
[2]"தொன்மைமுறை வருமண்ணின் துகளன்றித் துகளில்லா
நன்மைநிலை ஒழுக்கத்து நலஞ்சிறந்த குடிமல்கிச்
சென்னிமதி புனையவளர் மணிமாடச் செழும்பதிகள்
மன்னிநிறைந் துளதுதிரு முனைப்பாடி வளநாடு"
[3]"மறந்தருதீ நெறிமாற மணிகண்டர் வாய்மை நெறி
அறந்தருநா வுக்கரகம் ஆலால சுந்தரரும்
பிறந்தருள உளதானால் நம்மளவோ பேருலகில்
சிறந்ததிரு முனைப்பாடித் திறம்பாடுஞ் சீர்ப்பாடு.”

எனத் திருமுனைப்பாடி நாட்டைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். மற்றும், இலக்கணம் சிதம்பரநாத முனிவர் தமது திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்தில், “காஞ்சிபுர நாட்டுப் பகுதிக்குத் தெற்கிலும் காவிரி நாட்டுக்கு வடக்கிலும் உள்ளது திருமுனைப்பாடி நாடு; சுந்தரரும் நாவுக்கரசரும் தோன்றிச்


  1. பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 1.
  2. பெரிய புராணம் - திருநாவுக்கரசர் - 2, 11.
  3. பெரிய - திருநாவுக்கரசர் - 11.