பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடில நாடு

117


சிறந்தது அந்நாட்டில்தான்; நாடுகளுக்குள் மேம்பட்டது திருமுனைப்பாடி நாடு என்று காவியங்கள் கூறுகின்றன” - என்னும் கருத்தில்,

[1]"இன்ன நாவலந் தீலனிற் காஞ்சியின் தென்பால்
பொன்னி நல்வளம் பரப்புநாட் டுத்தரம் பொலிந்து
தன்னை யொப்பரும் பெண்ணைநீர் பாய்ந்தகந் தழைத்து
மன்னி வாழ்வது திருமுனைப் பாடிமா நாடு"
அன்ன நாட்டினில் ஆலால சுந்தரர் உதிப்ப
என்னையாள் வெண்ணை நாயகர் தடுத்தினி தாண்டார்
முன்னர் நாவினுக் கரசரு முளைத்திந்தக் கடலின்
மன்னி யேகரை யேறவிட் டார்புகழ் வளர்த்தார்”
"நாட்டின் மேம்படுந் திருமுனைப் பாடிநா டென்றே
ஏட்டின் மன்னிய காப்பியக் கவிகளே யிசைக்கும்..."

என்று புகழ்ந்து பாடியுள்ளார். திருவதிகை வாகீச பக்த நாவலர் தமது திருவதிகைப் புராணத்தில்,

[2]"தெய்வநன் னாட்டின் மேலாம் திருமுனைப் பாடிநாடு"
[3]"திருவுறு கெடிலம் பாயு திருமுனைப் பாடிநாடு"

என்றெல்லாம் பல பாடல்களில் பலபடப் புகழ்ந்துள்ளார். இவரும், அப்பரும் சுந்தரரும் பிறந்ததால் பெருமை பெற்ற நாடு எனக் கூறத் தவறவில்லை . இதே பெருமையைச் சிவசிதம்பரப் புலவரும் தமது ‘கரையேறவிட்ட நகர்ப் புராணம்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவர். திருமுனைப்பாடி நாட்டிற்கு ‘நடுநாடு’ என்னும் பெயர் உண்மையையும் குறிப்பிட்டுள்ளார். இந் நாடு ‘சீராமன் வழிபட்ட நாடு’ எனவும் புகழ்ந்துள்ளார். பாடற் பகுதிகள் வருமாறு:

[4]"ஓவு றாப்பெரு வளஞ்செய ஒளிர்நடு நாடாம்
பாவு சீர்முனைப் பாடிநாட் டணிவளம் பகர்வாம்"
  1. திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் - திருநாட்டுப் படலம் - 102, 103, 104.
  2. திருவதிகைப் புராணம் - திருநாட்டுப் படலம் - 3.
  3. திருவதிகைப் புராணம் - திருநாட்டுப் படலம் - 7.
  4. கரையேறவிட்ட நகர்ப் புராணம் - திருநாட்டுப் படலம் - 1, 40.