பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11. கெடில நாட்டு வரலாறு

வரலாற்றுத் தொன்மை

கெடிலக்கரை நாடு மிகப் பழம்பெரும் வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. கெடிலக்கரை நாடாகிய திருமுனைப்பாடி நாடு, வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்திலேயே (Pre - Historic Period) மிகவும் சிறப்புற்றிருந்ததாகத் தெரிகிறது. நாட்டுப் பெயர்கள், ஊர்ப் பெயர்கள், அரசர் பெயர்கள், தலைவர் பெயர்கள், காலக் கணக்கு அரசியல் - சமூக நிகழ்ச்சிகள் முதலியவை ஓரளவேனும் தெரியத் தொடங்கிய காலம் வரலாற்றுக் காலம் (Historic Time) எனப்படும். இவை ஒரு சிறிதும் தெரியாத காலம் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலம் (Pre - Historic Time) எனப்படும்.

உலகில் சில நாடுகள் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்திலேயே உருவாகி மிகவும் சிறப்புடன் விளங்கியிருக்கும்; சில நாடுகள் வரலாற்றுக் காலத்துக்கு மிகவும் பிற்பட்ட காலத்தில், அதாவது இற்றைக்குச் சில நூற்றாண்டுகட்கு முன்போ - அல்லது - சில ஆண்டுகட்கு முன்போதான் உருவாகி வளர்ச்சி பெற்றிருக்கும் - அல்லது - வளர்ந்து கொண்டிருக்கும். சிந்துவெளி, எகிப்து, மெசபொடோமியா, பாபிலோனியா, அசிரியா, காவிரிப் பூம்பட்டினம் முதலியவை வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலேயே உருவாகி வளர்ச்சி பெற்றிருந்தவை. புது அமெரிக்கா, ஆசுதிரேலியா, சிங்கப்பூர் முதலியவை சில நூற்றாண்டுகட்கு முன் உருவாகி வளர்ச்சி பெற்றவை. இந்த இருபெரும் பிரிவுகளுள் முதல் பிரிவைச் (Pre - Historic Period) சேர்ந்தது திருமுனைப்பாடி நாடு. மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டாயிரம் - மூவாயிரம், இன்னும் ஏறினால் ஐயாயிரம் ஆண்டுகால உலக வரலாறு ஓரளவு நமக்குத் தெரியக்கூடும் இந்தக் காலக் கணக்கிற்கு எல்லாம் அப்பால், பதினாயிரக் கணக்கான - ஏன் நூறாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முற்பட்டது திருமுனைப்பாடி நாடு. உலகில் திருமுனைப்பாடி நாடு ஒன்று மட்டுமே மிகப் பழமையானது என்று சொல்ல வரவில்லை; உலகின் மிகப் பழைய நாடுகளுள்