பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

கெடிலக்கரை நாகரிகம்


அமர்த்தப்பட்ட முசுலீம் ஆணையர்கள் ஆண்டு வந்தனர். தென்னிந்தியாவில் ஒளரங்கசீப்பின் பேரரசுக்குள் அகப்பட்டிருந்த மைசூர் மாநிலப் பகுதிகள் சிலவும் ஆந்திர மாநிலப் பகுதிகள் சிலவும், தமிழ் மாநிலப் பகுதிகள் சிலவும் இணைக்கப்பட்டுக் ‘கரு நாடகம்’ எனப் பெயர் கொடுக்கப் பட்டிருந்தன. 1700இல் ஔரங்கசீப்பின் ஆணைப்படி கருநாடகத்தின் தலைமை நவாப்பாக ‘தாவுத்கான்’ என்பவர் அமர்த்தப்பட்டார்; அவரது தலைநகரம் ஆர்க்காடு. அவரது தலைமையின்கீழ் செஞ்சிப் பகுதியின் ஆணையராக ‘சரூப்சிங்’ என்னும் இந்து மதவீரர் அமர்த்தப்பட்டார்.

இந்த நிலையில் வடக்கே ஔரங்கசீப் காலமாக, டில்லி ஆட்சி கலகலத்தது. தெற்கே யிருந்தவர்கள் உரிமையுடன் {சுதந்தரத்துடன்) நடக்கத் தொடங்கினர். கர்நாடகத் தலைமை நவாப்புக்குமேல் பெரிய தலைவராக ஐதராபாத்தில் ‘நிசாம்-உல் - முல்க்’ என்பவர் இருந்தார். இவர் தக்கணம் முழுவதற்கும் தம்மைத் தலைவரெனச் சொல்லித் தம்மை நிலைப்படுத்திக் கொண்டார்.

செஞ்சி சிங்குகள்

இங்கே செஞ்சிப் பகுதியைக் கவனித்து வந்த சரூப்சிங், ஆர்க்காட்டு நவாப்புக்குக் கட்டுப்படாமலும் கப்பம் கட்டாமலும் தம்மைத் தனி உரிமை உடையவரெனச் சொல்லிக் கொண்டார். இவர் தென்னார்க்காடு மாவட்டத்தின் பெரும் பகுதியைத் தம் ஆணையின்கீழ் வைத்திருந்தார். ஆங்கிலேயரின் கடலூர் செயிண்ட் டேவிட் கோட்டையையுங்கூடத் தாக்கினார். ஆங்கிலேயர் சிலரைச் செஞ்சியில் சிறைப் படுத்தியும் வைத்திருந்தார். இப்படியாகப் பல வீரச் செயல்கள் புரிந்து 1713இல் சரூப்சிங் இறந்து போனார். இவரைத் தொடர்ந்து இவர் மகன் தேசிங்கு என்னும் இளைஞர் பட்டத்துக்கு வந்தார். இவரும் தந்தை வழியைப் பின்பற்றினார். இவர் சில திங்கள்களே ஆட்சியில் இருந்தார். தாவுத்கானுக்குப் பின் கர்நாடக நவாப்பாக 1710 இல் ஆர்க்காட்டில் பட்டமேற்ற சதத்துல்லாகான், கப்பம் கட்டும்படி தேசிங்கை நெருக்கினார். கப்பம் கட்டாமல் நவாப்பை எதிர்த்துப் போரிட்டு இறுதியில் தேசிங்கு முடிவுற்ற கதை நாடறிந்த வரலாறு.