பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலநாட்டு வரலாறு

135


பிரெஞ்சுக்காரருமே பெரும்பங்கு கொண்டிருந்தனர். ஆங்கிலேயருள் ‘ராபர்ட் கிளைவ் என்பவரும், பிரெஞ்சுக்காரருள் ‘டூப்ளே’ என்பவரும் இன்றியமையாதவர்கள்.

பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே தென்னார்க்காடு மாவட்டத்தில் ஐரோப்பியர்கள் நன்கு வேரூன்றத் தொடங்கினர். போர்ச்சுகேசியரைப் பறங்கிப் பேட்டை கவர்ந்தது. டச்சுக்காரர் கடலூரில் தொழிற்சாலை கட்டத் தொடங்கினர். பிரெஞ்சுக்காரர் புதுச்சேரியில் கால் கொண்டனர். ஆங்கிலேயர்கள் கடலூரில் சரக்குக் கொட்டடியும் (1683), ‘செயின்ட் டேவிட்’ (Fort St, David) என்னும் பெயரில் ஒரு கோட்டையும் (1702) கட்டினர்.

ஆங்கில பிரெஞ்சுப் போட்டி

ஐரோப்பாவில் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் போர் என்றால், இங்கேயும் நமது மண்ணில் ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரருக்கும் போர்; அங்கே உடன்பாடு என்றால் இங்கேயும் உடன்பாடு; மீண்டும் அங்கே போர் என்றால் இங்கேயும் போர். ஐரோப்பாவில் தேள் கொட்டினால் நமது நாட்டில் நெறி கட்டிற்று; அங்கே மழை பெய்தால் இங்கே குடை பிடித்தார்கள் வெள்ளையர்கள். 1744 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் போர் நடந்தபோது, இங்கே தென்னார்க்காடு மாவட்டத்தில் சிதம்பரம், பறங்கிப்பேட்டை , கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செஞ்சி முதலிய இடங்கள் செருக்களங்களாய் மாறின.

இவ்வாறு நிகழ்ந்த பல போர்களின் விளைவாக, சென்னை, செஞ்சி, கடலூர், புதுச்சேரி முதலிய இடங்கள் ஆங்கிலேயர் கைக்கும் பிரெஞ்சுக்காரர் கைக்குமாக மாறி மாறிப் பந்தாடப்பட்டன. ஆங்கிலேயரின் கடலுர் செயின்ட் டேவிட் கோட்டையைப் பிடித்து நிலைப்படுத்திக் கொள்வதற்காக, பிரெஞ்சு தலைவர் டூப்ளே நான்கு முறை தாக்கினார் என்றால், ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் இடையே இருந்த போட்டி பொறாமை - போர்களின் கொடுமை நன்கு புலனாகுமே! இவ்வாறு பல தடவை கை மாறிய நிலையில், இறுதியாக 1783 இல் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே நட்பு உடன்படிக்கை ஏற்பட்டதால், இங்கே புதுச்சேரி பிரஞ்சுக்காரர்க்கும், கடலூர் முதலிய இடங்கள் ஆங்கிலேயர்க்குமாக மீண்டும் மாறி நிலை பெற்றன. இவ்விருதரப்பு வெள்ளையர்களின் போர்களுக்கிடையே,