பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலநாட்டு வரலாறு

137


இயக்கம், கள்ளுக்கடை மறியல், பதவி பட்டங்களைத் துறத்தல், வரி கொடாமை முதலிய பல்வேறு இயக்கங்களும் இடம் பெற்றன. கடலூர், பண்ணுருட்டி, விழுப்புரம் முதலிய இடங்களில் பல கிளர்ச்சிகளும் நடைபெற்றன. 1930 சனவரி 26 ஆம் நாள், ‘உரிமை நாள்’ (The Indcpendence Day) ஆக மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. 1930 ஏப்ரல் தொடங்கி மூன்று திங்கள் கால அளவுக்கு மேல் கடலூரில் உப்பு காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. திருவாளர்கள் நயினியப்பப்பிள்ளை , சுதர்சனம் நாயுடு, குமாரசாமிப்பிள்ளை முதலியோர் இப் போராட்டத்தின் முன்னணித் தலைவர்களாவர். அரசு பலரைச் சிறையில் வைத்தது. இப் போராட்டம் கடலூரினும் திண்டிவனத்தில் மிகவும் சூடு பிடித்திருந்தது.

உரிமைப் போராட்ட காலத்தில் இந்த மாவட்டப் பகுதிக்கு எத்தனையோ இந்தியத் தலைவர்கள் வந்து போயிருப்பினும், 1921 செப்டம்பரிலும் 1927 செப்டம்பரிலும் காந்தியடிகள் வருகை தந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. கடலூரில் கெடிலம் ஆற்று மணல் வெளியில் காந்தியண்ணல் சொற்பொழிவாற்றி மக்களுக்கு எழுச்சியூட்டினார்கள். மக்கள் வீறு கொண்டெழுந்தனர்.

இப்படியாகப் பல்வேறு வகைகளிலும், காந்தியடிகளின் உரிமைப் போராட்டத் திட்டங்களை வரவேற்றுப் பின்பற்றி, நாடு விடுதலை பெறுவதற்குத் தென்னார்க்காடு மாவட்டமும் தன் கடமைப் பங்கை ஆற்றியுள்ளது.

ஆங்கிலேயரிடமிருந்து நாடு விடுதலை யடைந்ததிலிருந்து, மக்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப் பெறும் பேராளர் வாயிலாகத் தம்மைத்தாமே உரிமையுடன் ஆண்டு கொண்டு வருகின்றனர்.

வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலம் தொட்டு இன்று (1967) வரை திருமுனைப்பாடி நாட்டின் சுருக்கமான வரலாறு இது தான்.