பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

கெடிலக்கரை நாகரிகம்


சிவனடியார் வழிபாட்டிலும் மிக்குச் சிறந்து விளங்கியதால், சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவராக வைத்து வழிபடப் பெறுகிறார். சைவ உலகம் இவரை மெய்ப்பொருள் நாயனார் என்றே அழைக்கும்.

காலம்

எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டினர் எனக் கருதப்படும் சுந்தரரால் இவர் திருத்தொண்டத் தொகையில் பாடப்பட்டிருப்பதால், சுந்தரர் காலத்துக்கும் முற்பட்டவர் இவர் என்பது தெளிவு. “இவர் வழியில் சுதர்மான் முதலிய மூவர் வம்சம் உண்டாயிற்று. இவர் காலம் ஒளவையார் காலமாக இருத்தல் வேண்டும். தந்தை தெய்வீக அரசன், தாய் சோழன் குமாரியாகிய பொன்மாலை” - என இவரைப் பற்றி ‘அபிதான சிந்தாமணி’ ஆசிரியர் எழுதியிருப்பது ஆராய்ச்சிக்குரியது.

நரசிங்க முனையரையர்

நாடும் மரபும்

கெடிலக்கரை சார்ந்த திருமுனைப்பாடி நாட்டைப் பல்வேறு காலங்களில் பல்வேறு அரசர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். பல்வேறு மரபுகளைச் சேர்ந்த பேரரசர்கள் நேரடி ஆட்சி புரிந்திருப்பதன்றி, பேரரசர்களின் கீழ்ப் பல்வேறு மரபுகளைச் சேர்ந்த சிற்றரசர்களும் குறுநில மன்னர்களும் செங்கோல் செலுத்தியுள்ளனர்; அவர்களுள் ஒருவர் நரசிங்க முனையரையர் என்பவர். இவர் நரசிங்க முனையர் எனவும் அழைக்கப்படுவதைப் பெரிய புராணத்தில் காணலாம்.

நரசிங்க முனைரையரின் குலமரபின் பெயர் ‘முனைய தரையர்’ என்பதாகும்; இது, ‘முனையரையர்” எனவும், ‘முனையர்’ எனவும் பின்னர் மருவிற்று. இம்மரபு குறுநில மன்னர் மரபாகும். கொடி - இலச்சினை. சிங்கம்; நரசிங்க முனையரையர் திருமுனைப்பாடி என்னும் நாட்டுப் பகுதியை அரசாண்டதாகச் சேக்கிழார் தெரிவித்துள்ளார்:

[1]"தேடாத பெருவளத்தில் சிறந்த திரு முனைப்பாடி
நாடுஆளும் காவலனார் நரசிங்க முனையரையர்"

என்பது பெரிய புராணப் பாடல். ‘முனைப்பாடி என்ற நாட்டின் பெயருக்கும் முனையரையர்’ என்னும் அரச மரபின் பெயருக்கும்


  1. *பெரிய புராணம் - நரசிங்க முனையரையர் - 1.