பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை அரசுகள்

155


கன்னியரைத் தருகின்றோம் நீர் தோற்பின் உமது குதிரையைத் தருக எனப் பந்தயம் இட்டு யுத்தத்தில் தோற்றுத் தமது கன்னியரை அரசனுக்கு மணஞ்செய்வித்தனர். இவன் காரண்டன், வல்லூரன் எனும் இரண்டு அசுரரை வதைத்து, பாண்டியன் புத்திரியாகிய காஞ்சனமாலையை மணந்து, நரசிங்க முனையரைய நாயனாரைப் பெற்றுச் சோழன் புத்திரியாகிய பொன் மாலையிடம் மெய்ப்பொருள் நாயனாரைப் பெற்றுச் சேரன் குமரியாகிய பத்மாவதியிடம் சித்திர சேநனைப் பெற்று முத்தி அடைந்தனன். இவன் வழியில் நந்தமான் வம்சம், சுதர்மான் வம்சம், மலையமான் வம்சம் உண்டாயின.

மேலுள்ள அபிதான சிந்தாமணிக் கருத்துக்களை நம்பினால், மெய்ப்பொருள் நாயனாரும் நரசிங்க முனையரையரும் தெய்வீகனின் மக்கள் எனவும் மலையமான்கள் தெய்வீகனின் பேரப் பிள்ளைகள் எனவும் கொள்ள வேண்டும். கொள்ளவே, மெய்ப்பொருள் நாயனாரும் நரசிங்க முனையரையரும், நரசிங்கரால் வளர்க்கப் பெற்ற சுந்தரரும், சங்க காலத்தில் வாழ்ந்த மலையமான் திருமுடிக் காரி முதலிய மன்னர்களினும் காலத்தால் முற்பட்டவர்கள் என்று கொள்ள வேண்டி வரும். இத்தகைய முடிவுகள் சிறிதும் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருந்துவனவாகத் தெரியவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சங்ககால மலையமான்கள் எங்கே? எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டினரான நரசிங்க முனையரையர் எங்கே?

சங்க கால மன்னர்களின் - மக்களின் பெயர்கள் தனித் தமிழ்ப் பெயர்களாகவும், சங்க காலத்துக்குப் பிற்காலத்து மன்னர்களின் - மக்களின் பெயர்கள் வடமொழிச் சார்புடையனவாகவும் இருப்பதைக் காணலாம். எடுத்துக் காட்டாக, சங்க காலத்தில் சோழ மன்னர்களின் பெயர்கள் கரிகாலன், நெடுமுடிக்கிள்ளி என்பனவாகவும், பாண்டிய மன்னர்களின் பெயர்கள் இளம்பெருவழுதி, நெடுஞ்செழியன் என்பனவாகவும் இருந்ததையும், பிற்காலத்தில் சோழர் பெயர்கள் விஜயாலயன், இராஜராஜன் என்பனவாகவும், பாண்டியர் பெயர்கள் ஜடாவர்மன் , சுந்தரபாண்டியன், மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்பனவாகவும் இருந்ததையும் காண்க. எனவே, தனித்தமிழ்ப் பெயர்களையுடைய மலையமான் திருமுடிக்காரி, மலையமான் திருக்கண்ணன் முதலியோர் முற்பட்டவர் என்பதும், வடமொழிப் பெயருடைய நரசிங்க முனையரையர் பிற்பட்டவர் என்பதும் தெளிவு.