பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

கெடிலக்கரை நாகரிகம்


கட்டைகள் இருந்ததற்கான சுவடுகள் உள்ளன. பல கட்டைகள் இடிந்துபோக, இப்போது சில கட்டைகளே எஞ்சியுள்ளன. இந்தப் படத்தில் மதிலுக்கு மேலே மூன்று கட்டைகள் இடைவெளிகளுடன் இருக்கக் காண்கிறோம். மதில்களின் மேலே இடைவெளிகளுடன் இந்தக் கட்டைகளை அமைத்திருப்பதன் நோக்கம் யாது? கட்டைகளுக்கு நடுவேயுள்ள ஒவ்வோர் இடைவெளியிலும் ஒவ்வொரு காவலர் படைக் கலத்துடன் நின்று காவல் காப்பதே இந்த அமைப்பின் நோக்கம். இக் காவல் மறவர்கள் தொலைவில் வரும் பகைவர்களை முன்கூட்டியறிந்து தம் அரசுக்குச் செய்தி தெரிவிக்கவும், எவரும் கோட்டையைத் தாக்கி உட்புகாதபடி தடுத்துக் காக்கவும் இந்த அமைப்பு அக்காலத்தில் உதவியது.

இவ்வளவு ஏற்பாடு செய்திருந்தும், இன்று கோட்டை எங்கே? கோப்பெருஞ்சிங்கன் எங்கே? மதி மயக்கங் கொண்ட மன்னர்களின் மண்ணாசை எங்கே? மதி மயக்கங் கொண்ட மன்னர்களின் மண்ணாசை எங்கே? பாழடைந்த இக் கோட்டையின் முன்பு - மக்களின்றி இடிபாடுகளுடன் தனித்துக் கிடக்கும் இக் கோட்டையின் எதிரில் நின்று பார்க்கும்போது, உலகத்தின் நிலையாமை உணர்வு உள்ளத்தில் உந்தத் தலை சுற்றுகிறது. வானவூர்தியில் வந்து அணுகுண்டுகளைத் துவும் இந் நாளில், இவ்வகைக் கோட்டைகளின் இரங்கத்தக்க நிலை என்னே - என்னே!

ஏகம்ப வாணன்

திருக்கோவலூருக்குத் தென் கிழக்கே 22 கி.மீட்டர் தொலைவில் கெடிலத்தின் தென்கரையிலுள்ள ஆற்றுார் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன் ஏகம்பவாணன். ஆற்றுார் ஆறை’ எனவும் மருவி வழங்கும். வாணன் இலக்கியங்களில், ஆறையர்கோன், ஆறைநகர் காவலன், ஆறை ஏகம்பவாணன் என்றெல்லாம் அழைக்கப்பட்டுள்ளான்.

தமிழகத்தில் இருந்த எத்தனையோ சிற்றரசர் மரபுகளுள் வாணர் மரபும் ஒன்று. அம் மரபினருள் ஏகம்பவாணன் மிகச் சிறந்தவனாக விளங்கினான். இவனும் கொடை மறமும் படை மறமும் ஒரு சேரமிக்குத் திகழ்ந்தான். சோற்றுக்கு அரிசி கேட்ட புலவர் ஒருவர்க்கு இவன் யானையைக் கொடுத்தானாம். இதனைப் பெருந்தொகையிலுள்ள

“சேற்றுக் கமலவயல் தென்னாறை வாணனையான்

சோற்றுக் கரிசிதரச் சொன்னக்கால் - வேற்றுக்
களிக்குமா வைத்தந்தான் கற்றவர்க்குச் செம்பொன்
அளிக்குமா றெல்வா றவன்"