பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடில நாட்டுப் பெருமக்கள்

167


தல்லவா? இந்த அச்ச உணர்வால், திருவாமூர்ப் பகுதி வேளாண் மக்கள், மணம்பேசி உறுதி (நிச்சயதார்த்தம்) செய்தல், திருமணம் நிகழ்த்துதல் ஆகிய இரண்டு வினைகளையும் ஒரே நாளில் நடத்தி வருகின்றனராம்.

தமது பெருந்தகுதியால் தமிழ்மக்களின் உள்ளங்களில் நீங்காது நிலைபெற்றுள்ள திலகவதியார் தம் கண்ணே போல் போற்றிக் காத்துவந்த மலர்வனத்தை இன்றும் திருவதிகையில் காணலாம். அஃதாவது, அந்த இடத்தில் வாழையடி வாழையாகத் தொடர்ந்து செடிகொடிகள் இருந்து வருவதைச் சிதைந்த நிலையில் இன்று காணலாம்.

திலகவதியாரின் பெருமைக்கு அழியாச் சான்றாக, திருவதிகைச் சிவன் கோயிலுக்குள் அவருக்கும் ஒரு சிறு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. தெய்வங்களொடு தெய்வமாய்ச் சேர்ந்து வழிபடும் அளவிற்கு அம்மையாரின் புகழ் வானளாவ உயர்ந்துவிட்டது. உயர்ந்த உழைப்பின் பயன் வீண்போகாது போலும்! பெண்ணுலகிற்கு ஒரு பெருந் திலகமாய் வதிந்த திலகவதியார் புகழ் ஓங்குக! அவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கோயில்கொண்டுள்ள கெடிலக்கரை வாழ்க!

திருநாவுக்கரசர்

வரலாறு

திலகவதியாரின் தம்பி திருநாவுக்கரசரின் வரலாறு, முன்னேயுள்ள திலகவதியாரின் வரலாற்றுப் பகுதியில் ஒருசிறிது சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசரின் இயற்பெயர் - இளமைப் பெயர் மருள்நீக்கியார் என்பது. அறியாமையாம் மயக்கம் நீக்கியவர் என்பது அதன் பொருள். எவ்வளவு அழகிய இனிய பொருள் பொதிந்த தமிழ்ப் பெயர்! இப்பெயரை இலங்கைத் தமிழரிடையே இன்றும் காணலாம். இவ்வளவு நல்ல பெயரைச் சூட்டிய பெற்றோரை யிழந்து, தமக்கையின் ஆதரவில் வளர்ந்து வந்த மருள் நீக்கியார் சமண சமயம் புக்கு, தருமசேனர் என்னும் பெயருடன் பாடலிபுத்திரத்தில் ஒருபெரிய சமணத் தலைவராய் விளங்கினமை, அவருடைய இயற்கைத் திறமைக்கு ஒரு பெரிய சான்றாகும். குறுகிய கால அளவில் ஒரு தலைவராய் விளங்குவது என்பது எல்லோர்க்கும் இயலக் கூடியதன்று. தருமசேனர் திறமை மிக்க தலைவராய் விளங்கியதனால் தான், அவர்