பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

கெடிலக்கரை நாகரிகம்


சைவத்திற்கு மீண்டதும் சமணர்கள் மிகுந்த பரபரப்பு அடைந்தனர். அவர் சோற்றுக்குக் கேடான ஓர் எளிய சமணத் தொண்டனாய் இருந்திருந்தால், அவர் சைவத்திற்கு மீண்டதற்காகச் சமணர்கள் கவலைப்பட்டிருக்கமாட்டார்கள். தலைசிறந்த தலைவனை இழந்துவிட்ட ஏமாற்றத்தால் ஏக்கத்தால், சமணர்கள் பல்லவ மன்னனின் துணைகொண்டு நாவுக்கரசரைச் சுண்ணாம்பு நீற்றறையில் இட்டனர்; நஞ்சூட்டினர்; யானையைக் கொண்டு தலையை இடறச்செய்ய முயன்றனர்; கல்லிலே கட்டிக் கடலிலே எறிந்தனர்; இன்னும் என்னென்னவோ தொல்லைகள் தந்தனர். எல்லாக் கொடுமைகளினின்றும் நாவுக்கரசர் தப்பினார்; நாட்டு மன்னனையும் மக்களையும் மீட்டு நாட்டில் சைவத்தை நிலைநாட்டினார்.

இவர் திருவதிகைச் சிவன் திருமுன்பு, ‘கூற்றாயினவாறு விலக்ககிலீர்’ என்னும் திருப்பதிகம் பாடிச் சூலைநோய் நீங்கப்பெற்றதும், இவரது நாவன்மையை சொல்வன்மையைப் பாராட்டி இறைவன் இவரை ‘நாவுக்கரசு என அழைத்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் சீர்கழி சென்று திருஞான சம்பந்தரைக் கண்டபோது, அவர் இவரை அப்பரே வருக என அழைத்தாராம். பிற்காலத்தில் இவர்க்குத் திருநாவுக்கரசர், அப்பர் என்னும் இருபெயர்களும் நின்று நிலைத்து விட்டன. வாகீசர், ஆளுடைய அரசு எனவும் இவர் அழைக்கப்படுவதுண்டு.

நாவுக்கரசர் நடுநாடு, சோழநாடு, தொண்டைநாடு, பாண்டிநாடு ஆகிய இடங்கட்கெல்லாம் முறையே சென்று, ஆங்காங்குள்ள திருப்பதிகள் தோறும் இறைவனை வணங்கித் திருப்பதிகங்கள் பல பாடியருளினார்; பல வியத்தகு நிகழ்ச்சிகளும் புரிந்தார். கைலை கண்டு வணங்க வேண்டும் என வடநாடு நோக்கிக் காசிவரையும் சென்றார். கைலை செல்வது அரிது என உணர்த்தப்பட்டு, தென்னாட்டிலுள்ள திருவையாறு அடைந்து அங்கே கைலைக் கோலத்தைக் கண்டு வழிபட்டாராம். இந்தக் காலத்தைப் போல் போக்கு வரவு வசதியில்லாத அந்தக் காலத்தில் காலே துணையாக அவ்வளவு தொலைவு பயணம் செய்ததை எண்ணும்போது, அடுத்த தெருவிற்கு வண்டியில் செல்லும் இருபதாம் நூற்றாண்டினர்க்குத் தலை சுற்றத்தான் செய்யும். அப்பர் பெருமான் பற்பல ஊர்கட்கும் சென்று பண்ணோடு தேவாரப் பாமாலை பல புனைந்து தமிழ் மொழியையும் தமிழ் நாட்டையும் ஒருசேர வளப்படுத்தி இறுதியில் திருப்புகலூரில் எண்பத்தோராவது வயதில் சித்திரைச் சதய நாளில் இறைவனடி சேர்ந்தார்.