பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடில நாட்டுப் பெருமக்கள்

173


அகன்று பரந்துள்ளது. அம்மரத்தின் இலையும் கனியும் பட்டையும் பல்வகை நோய்களைப் போக்கக் கூடியவை என்றும், நச்சுக் கடிகட்கு நல்லவை என்றும் சொல்கின்றனர். எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் மக்கள் மரத்தின் பட்டையை உரித்துக்கொண்டுபோய் விடுவதாகக் கூறிச் சிலர் வருத்தம் தெரிவித்தனர். திருநாவுக்கரசரின் பெருமைக்கு ஒரு தெய்வச்சான்றாக உள்ள அக் களரி வாகை மரம், இன்னும் பல்லாண்டு பல்லாண்டு நின்று நிலைத்துச் செழித்து வாழ்க!

விழாக்கள்

பல ஊர்ச் சிவன் கோயில்களில், திருநாவுக்கரசர் வீடுபேறடைந்த சித்திரைச் சதயநாளில் மட்டும் திருநாவுக்கரசருக்குத் திருவிழா நடத்துவது வழக்கம். திருவாமூரில் உள்ள திருநாவுக்கரசர் திருக்கோயிலிலோ, அவர் வீடுபேறடைந்த சித்திரைச் சதயத்திலும் திங்கள் தோறும் வரும் சதயத்திலும் விழா நடத்துவதல்லாமல், அவர் பிறந்த பங்குனி உரோகிணி நாளிலும் அவருக்குச் சிறப்பாகத் திருவிழா நடத்தப் பெறுவது குறிப்பிடத்தக்கது. பிறந்த இடத்தில் பிறந்தநாள் விழா நடத்துவது மிகவும் பொருத்தம் அல்லவா?

சுந்தரர்

வரலாறு

சைவ சமய குரவர் நால்வருள் ஒருவராகிய சுந்தரர் கெடிலத்தின் வடகரையிலுள்ள திருநாவலூர் என்னும் ஊரில் தோன்றினார். தந்தையார் சடையனார் என்னும் பெயரினர்; தாயார் இசை ஞானியார் என்பவர். இவ்விருவரும் சைவ நாயன்மார் அறுபத்து மூவர் வரிசையில் வைத்துப் போற்றப் படுகின்றனர். திருக்கோயிலில் பூசனை புரியும் குருக்கள் மரபில் தோன்றிய சுந்தரரை, அவ்வூர் அரசர் நரசிங்கமுனையரையர் எடுத்து வளர்த்து ஆளாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இவரது இளமைப் பெயர் நம்பியாரூரர் என்பது.

புத்துரர் என்னும் ஊரில் சுந்தரர்க்குத் திருமண ஏற்பாடு நடந்தது. சிவ பூசையில் கரடி விட்டாற்போல், திருமண வேளையில் கிழ அந்தணர் ஒருவர் வந்து, சுந்தரரை நோக்கி, ‘நீ என் அடிமை’ என வாதிட்டார். சுந்தரர், ‘நீ ஒரு பித்தன்; நான் உன் அடிமை அல்லன்’ என மறுத்தார். மணம் தடைப்பட்டது. இருவரும் வழக்கிட்டுக் கொண்டு திருவெண்ணெய்