பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

கெடிலக்கரை நாகரிகம்


நல்லூரிலிருந்த அறமன்றம் போந்தனர். வந்த அந்தணரே வழக்கில் வென்றார்.

இந் நிகழ்ச்சிக்குக் காரணமாக முன்பிறவி நிகழ்ச்சியொன்று பெரிய புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பிறவி நிலையில் சுந்தரர் கைலாயத்தில் ஆலால சுந்தரர் என்னும் பெயருடன் சிவனுக்குத் தொண்டுபுரிந்து வந்தாராம். ஒரு நாள் மலர் கொய்ய மலர் வனத்திற்குச் சென்றிருந்தார். அங்கே, பார்வதி தேவியின் தொண்டர்களாகிய அநிந்திதை, கமலினி என்னும் மகளிர் இருவரையும் கண்டு காதல் கொண்டார். அக் குற்றத்திற்காக மூவரும் மண்ணுலகில் சென்று பிறக்கும்படி பணிக்கப்பட்டனர். ஆலால சுந்தரர் அஞ்சித் தம்மை ஆட்கொள்ளும்படி இறைவனை வேண்டினார். அவ்வாறே செய்வதாக இறைவன் அருள் புரிந்தார். பின்னர், ஆலாலசுந்தரர் திருநாவலூரில் நம்பியாரூராய்த் தோன்றினார். கமலினி திருவாரூரில் பரவையார் என்னும் பெண்மணியாகவும், அநிந்திதை திருவொற்றியூரில் சங்கிலியார் என்னும் பெண்மணியாகவும் பிறந்தனர். இது புராணக்கதை.

இந்தக் கதைக்கு ஏற்ப, சிவபெருமான் கிழ அந்தணராக வந்து, சுந்தரரின் திருமணத்தைக் கலைத்து வழக்கில் வென்று, உலகப் பற்றிலிருந்து அவரை ஆட்கொண்டதாகச் சொல்லப் படுகிறது. அந்தணராக வந்து வழக்குவென்ற இறைவன் கடவுட் கோலத்துடன் காட்சி தந்து, “பித்தன்” என்று வைத சுந்தரரை அவ்வாறே சொல்லிப் பாடும்படி பணிக்க, பித்தா பிறை சூடி’ என்று தொடங்கிப் பாடினாராம். இதுதான் சுந்தரரின் முதல் தேவாரப் பாடல்.

பின்னர்ச் சுந்தரர் பல திருப்பதிகட்கும் சென்று இறைவனை வணங்கித் தேவாரப் பதிகங்கள் பல பாடினார். திருவாரூர் சென்றபோது அங்கே பரவையாரை மணந்து கொண்டார். திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து கொண்டார். இந்த இரண்டு திருமணங்கட்கும் பழைய கைலாய நிகழ்ச்சி காரணம் என்று புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

சுந்தரர்க்குச் சேர மன்னராகிய சேரமான் பெருமாள் நாயனார் சிறந்த நண்பரானார். சுந்தரர் திருவஞ்சைக்களம் என்னும் திருப்பதி போந்து திருக்கோயில் வழிபாடுசெய்து கொண்டிருந்தபோது, சிவனது கட்டளைப்படி தேவர்கள் வெள்ளையானை கொண்டுவந்து அதில் இவரை அமர்த்திக் கைலைக்கு அழைத்துச் சென்றதாகவும், அஃதறிந்த சேரமானும் குதிரைe திவர்ந்து சுந்தரருடன் கைலை சேர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.