பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

கெடிலக்கரை நாகரிகம்



இராமலிங்கர் பலரது வேண்டுகோளின்படி தனக்கோட்டி யம்மையார் என்பவரை மணந்து கொள்ளினும் புளியம் பழமும் ஒடும்போல் இல்லறத் துறவியாகவே இருந்து வந்தார்.

இராமலிங்கர் எல்லா வகை உயிரினங்களிடத்தும் பேரன்பும் பேரிரக்கமும் கொண்டிருந்தார். உலகத்தை, சாதி - சமய வேறுபாடற்ற ஒன்றிய ஒரே சமுதாயமாக மாற்ற வேண்டுமென்று கனவு கண்டார். தம் கொள்கைகளை நிறைவேற்ற வடலூரில் ‘சத்திய ஞானசபை நிறுவினார்; ‘சத்திய தருமச்சாலை அமைத்தார்; ‘சமரச சன்மார்க்க சங்கம்’ ஒன்றும் உருவாக்கினார்.

வடலூர் கடலூர் வட்டத்தில், கடலூர் - விருத்தாசலம் போகும் வழியில் உள்ளது. அங்கே இராமலிங்க அடிகளாரால் அமைக்கப்பட்டுள்ள ‘சத்திய ஞானசபை’ தாமரை வடிவில் எண்கோணமுடையதாய்ப் புதிய முறையில் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து காட்சியளிக்கிறது. அதிலே, அருளொளி வடிவினனான இறைவனை, ஏழு திரைகள் விலக்கி ஒளிக்காட்சியாயக் காணும் ‘ஒளிவழிபாடு நடைபெறுகிறது. பொதுவாக எல்லாத் திங்களிலும் வரும் பூச நாளிலும் - சிறப்பாகத் தைப்பூச நாளிலும் அங்கே திருவிழா நடைபெறும். தைப்பூசத்தில் நடைபெறுவதோ மிகப் பெரிய விழாவாகும்.

வடலூரில் சத்திய ஞானசபை அமைத்த வள்ளலார், அதற்கு அண்மையில் தெற்கே 5 கி.மீ. தொலைவிலுள்ள மேட்டுக் குப்பம் என்னும் ஊரிலேயே தங்கியிருந்தார். அங்கே அவர் தங்கியிருந்த மனைக்குச் சித்திவளாகம் என்பது பெயர். அஃது எளிய குடில் வடிவில் இன்றும் திகழ்கிறது. இராமலிங்க அடிகளார் தம் வாணாளின் இறுதியில் (1874ஆம் ஆண்டு) ஒரு நாள் சித்தி வளாகத்தின் ஒர் அறைக்குள் புகுந்து காப்பிட்டுக் கொண்டதாகவும், பின்னர் வெளிவரவேயில்லை என்பதாகவும் சொல்லப்படுகிறது. மரணமிலாப் பெருவாழ்வு வாழலாம் கண்டீர் என்று சாகாக் கலையை உலகிற்கு அறிவுறுத்திய அடிகளார் சாகாப் பெருநிலை எய்தினார்.

திருவருட்பா

இராமலிங்க அடிகளாரின் மணாக்கருள் ஒருவராய தொழுவூர் வேலாயுத முதலியார் அடிகளார் அருளியுள்ள பாடல்களையெல்லாம் ‘திருவருட்பா’ என்னும் பெயரில் தொகுத்துள்ளார். திருவருட்பா என்பதற்கு, இறைவன் திருவருளால் எழுந்த பாடல் - இறைவன் திருவருளைப் பற்றிய பாடல் என்றெல்லாம் பொருள் விளக்கம் கூறப்படுகிறது.