பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடில நாட்டுப் பெருமக்கள்

189



திருவருட்பா ஆறு திருமுறைகளாகப் (Volumes) பகுக்கப்பட்டுள்ளது. அருட்பாவில் இயல்தமிழ்ப் பாக்களோடு கீர்த்தனம், கண்ணி, கும்மி முதலிய இசைத்தமிழ்ப் பாக்களும் உள்ளன. பாடல்களேயன்றி, சீவகாருணிய ஒழுக்கம், மனு முறை கண்ட வாசகம் முதலிய இனிய உரை நடைகளும் அடிகளார் எழுதியுள்ளார்கள். சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டுமானால், இராமலிங்க அடிகளாரையும் அவரது அருட்பாவையும் பற்றி அறியாத தமிழர் உலகில் இல்லை எனலாம்.

ஞானியார் சுவாமிகள்

இருபத்தைந்து ஆண்டுகட்குமுன் தமிழ் நாட்டில் “ஞானியார் சுவாமிகள்” என்றால், சிறுவர் முதல் முதியோர் வரை - கற்றவர் கல்லாதவர், தொழிலாளர், அரசாங்க உயர் அலுவலர், ஏழையர், செல்வர் முதலிய பலரும் அறிவர். அருள்மிகு சமயத் தலைவராயும், கற்றுத் துறைபோகிய பெரும் புலவராயும் தலைசிறந்த பேச்சாளராயும் திகழ்ந்த திருவருட் செல்வர் ஞானியார் அடிகள். அவர்களிடம் முறையே பாடங் கேட்டுப் பெரும் புலவரானவர்கள் நூற்றுக்கணக்கானவர். அடிகளாரின் சொற்பொழிவுகளைக் கேட்டுப் புலமை பெற்றவர்கள் ஆயிரக்கணக்கானவர். அவர்தம் அருளுரைகளைச் செவிமடுத்து நல்லறமும் நல்லொழுக்கமும் உடையவராய்த் திகழ்ந்தவர்கள் நூறாயிரக் கணக்கானவர்கள்.

தமிழிலும் வடமொழியிலும் மிக்க புலமையும் ஆங்கிலத்தில் போதிய திறமையும் பெற்றுத் திகழ்ந்தவர் அடிகளார். கேட்பவர் உள்ளங்களைத் தம்பால் ஈர்த்துப் பிணித்து, நான்கு மணிநேரம் - ஐந்து மணிநேரம் சேர்ந்தாற்போல் தொடர்ந்து சொற்பொழிவாற்றும் பேராற்றல் படைத்தவர் அடிகளார். பெருந் தலைவர்கள் - பெரும்புலவர்கள் பலரும் அடிகளாரின் திருவடிகளில் விழுந்து வணங்கித் திருநீறு பெற்றுப் பெருமையுறுவர். தமிழ்நாடு முழுவதும் அன்பராயினார் பலர், எங்கள் ஊருக்கு வரவேண்டும் - எங்கள் ஊருக்கு வரவேண்டும் என வேண்டி அன்புடன் அழைத்துச் சென்று சொற்பொழிவாற்றச் செய்து கேட்டு மகிழ்வர். அடிகளாரின் தலைமையில் பேசாத பெரும் புலவர்கள் இல்லை எனலாம்; அடிகளார் தலைமை தாங்கிப் பேசாத பெருங் கழகங்களும் இல்லை எனலாம்.

அடிகளார் இட்ட பணிகளை அன்புடன் செய்வதைத் தம் வாழ்நாளில் பெற்ற பெரும் பேறாகக் கருதியோர் பலர்.