பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14. கெடிலக்கரை இலக்கியங்கள்

‘கெடிலக்கரை இலக்கியங்கள்’ என்ற தலைப்பில், கெடிலக்கரை நாடாகிய திருமுனைப்பாடி நாட்டு ஊர்கள், கோயில்கள், அரசர்கள், தலைவர்கள், மக்கள் பற்றிய இலக்கியங்கள் அடங்கும், பிற நாட்டில் பிறந்தவர்கள் திருமுனைப்பாடி நாட்டுக் கோயில்களையும் அரசர்களையும் பாடியுள்ள பாடல்களும் இத் தலைப்பில் அடங்கும். அஃதாவது, திருமுனைப்பாடி நாட்டு உயர்திணைப் பொருள் - அஃறிணைப் பொருள்களைப் பற்றிய பாடல் பகுதிகள் யாவும் இதனுள் அடங்கும். இந் நாட்டுப் பகுதியைப் பற்றிச் சங்க காலத் தொட்டு இருபதாம் நூற்றாண்டு வரை இயற்றப்பட்டுள்ள இன்றியமையாத சில இலக்கியங்களைத் தெரிந்த வரையில் - கிடைத்துள்ள வரையில் காண்போம்.

சங்க கால இலக்கியங்கள்

கெடிலம் பாயும் திருமுனைப்பாடி நாட்டைப் பற்றிச் சங்க நூல்களில் அறியக் கிடைத்துள்ள செய்திகள், திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு அரசோச்சிய மலையமான் மரபினரைப் பற்றிய செய்திகளே. மலையமான் மரபினருள்ளும், மலையமான் திருமுடிக்காரி, அவன் மக்கள், அவன் தம்பி மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் ஆகியோரைப் பற்றிய செய்திகள் மட்டுமே ஓரளவு தெரிய வந்துள்ளன. சங்க நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, சிறுபாணாற்றுப்படை என்னும் நூல்களில் மலையமான் மரபினர் இடம் பெற்றுள்ளனர். இவற்றுள், முதல் நான்கும் ஒருவரைப் பற்றி ஒரே புலவரால் பாடப்பட்ட நூல்கள் அல்ல; மன்னர் பலரைப் புலவர் பலர் பாடிய தனித்தனிப் பாடல்கள் பலவற்றின் தொகுப்பே இவை. எனவே, மலையமான் மரபினரைப் பற்றிய ஒவ்வொரு தனிப்பாடலும், கெடில நாட்டுத் தொடர்புடைய ஒவ்வொரு தனி இலக்கியம் போன்றதாம். இனி, ஒவ்வொருவரையும் பற்றிய பாடற் குறிப்புக்கள் வருமாறு :