பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை இலக்கியங்கள்

215


என்றால் - அதிலும், கலம்பகம் பாடுவதில் வல்ல புலவர்களே வியந்து பாராட்டியிருக்கிறார்கள் என்றால், இதன் மாண்சிறப்பு எத்துணைய தென்பது நன்கு விளங்குமே!

நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி

ஆசிரியர்

வைணவத் திருப்பதிகள் நூற்றெட்டையும் பற்றி அந்தாதித் தொடையாகப் பாடப் பெற்ற நூல் இது. இதன் ஆசிரியர் அழகிய மணவாளதாசர் என்னும் ‘பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் ஆவார். இந்நூலில், நடுநாட்டுத் திருப்பதிகளான திருவயிந்திரபுரமும் திருக்கோவலூரும் இடம்பெற்றுள்ளன. அவை பற்றிய பாடல்கள் (72, 73) முறையே வருமாறு:

திருவயிந்திரபுரம்

“அன்பணிந்த சிந்தையரா யாய்ந்த மலர்தூவி
முன்பணிந்து நீரெமக்கு மூர்த்தியரே - என்பர்
எமையிந் திரபுரத்தார்க் கின்றொண்ட ரானார்
தமையிந் திரபுரத்தார் தாம்”

திருக்கோவலூர்

“தாமைரையா னாதியாய்த் தாவரங்க ளீறான
சேம வுயிருஞ் செகமனைத்தும் - பூமடந்தைக்
காங்கோவ லாயுதன்பின் னாக வவதரித்த
பூங்கோவ லாயன் பொருள்”

காலம்

பல்வேறு ஆராய்ச்சிகளையும் கூர்ந்து நோக்குமிடத்து, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியின் காலம் பன்னிரண்டு அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டாயிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

அருணகிரிநாதர் திருப்புகழ்

திருப்பதிகள் தோறும் சென்று சிவபெருமான் மேல் மூவர் பதிகம் பாடியதுபோல, அருணகிரிநாதர் முருகப் பெருமான்