பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

கெடிலக்கரை நாகரிகம்



திருவதிகைப் புராணம்

ஆசிரியர்

திருவதிகையின் புகழ்பாடும் புராணம் திருவதிகைப் புராணமாகும். இதன் ஆசிரியர் திருவதிகை வாகீச பக்த நாவலர் என்னும் புலவராவார். இவருக்கு ‘அப்பாவு’ என்னும் பெயரும் உண்டு, இஃது இயற் பெயராயிருக்கக் கூடும். இவர், மயிலம் பொம்மபுரம் சிவஞான பாலைய தேசிகர் ஆதீனப் புலவராவார். இவர் திருவதிகைப் புராணமேயன்றி, புட்பாசலப் புராணம், திருநாவுக்கரர் சுவாமிகள் பிள்ளைத் தமிழ், திருநாவுக்கரசு சுவாமிகள் இரட்டை மணிமாலை, திருவதிகை உலா, திருவாமூர்ப் புராணம் முதலிய நூல்களும் இயற்றியுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் இவர். திருவதி கைப்புராணம் 1902ஆம் ஆண்டு சென்னையில் அச்சிடப்பட்டது.

நூல்

இந்நூலில் கடவுள் வாழ்த்து, அவையடக்கம், சிறப்புப் பாயிரம் ஆகியவை போக, திருநாட்டுப் படலம் முதற் கொண்டு நைமிச முனிவர் பூசித்த படலம் இறுதியாக மொத்தம் இருபத்தொன்பது படலங்கள் உள்ளன. நூலின் மொத்தப் பாடல்கள் 1037 ஆகும். இவையேயன்றி, நூலாசிரியரைப் பாராட்டிப் புலவர் பெருமக்கள் பலரால் இயற்றப்பெற்ற அணிந்துரைப் பாக்கள் பல நூலின் முகப்பை அணி செய்கின்றன. இனி இந்நூலில் உள்ள சில சிறப்புச் செய்திகள் வருமாறு:

திலகவதியார், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் முதலானோர் தொடர்பாகத் திருவதிகையில் நிகழ்ந்தனவாகப் பெரிய புராணத்தில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் பலவும் சிறப்பாகவும் விரிவாகவும் திருவதிகைப் புராணத்தில் விளக்கப்பட்டுள்ளன. மற்றும், திருவதிகையில் சிவபெருமான் முப்புரங்களை எரித்தது, தருமன் முதலிய ஐவர் வழிபட்டது, திருமால் புத்த அவதாரம் எடுத்தது, பிரமன், கருடன், நைமிச முனிவர் முதலியோர் பூசனை புரிந்தது முதலிய பல்வேறு செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கைலைமலையின் கீழ் அகப்பட்டுத் தவித்த இராவணனுக்கு, சாமகானம் பாடித் தப்பித்துக் கொள்ளும்படி சூழ்ச்சி சொன்ன வாகீச முனிவர் என்பவர், அக் குற்றத்திற்காகச் சிவனது ஆணைப்படி