பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பக்கத்து வீட்டுப் பணக்காரி

245


பக்கத்தில் நெருங்கித் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. கடலூருக்கு அருகில் கெடிலத்திற்கும் பெண்ணையாற்றுக்கும் நடுவே உள்ள இடைவெளி ஒன்றரை கி.மீ தொலைவுதான். இதனால்தான், பெண்ணையாறு கெடிலத்தின் பக்கத்து வீட்டுப் பணக்காரி என இங்கே உருவகம் செய்யப்பட்டது.

பெண்ணையாறு கெடிலத்தினும் நீளமும் அகலமும் உடைமையானும், மலையமான் மரபு மன்னர்களின் தலைநகராய்ச் சங்க காலத்தில் விளங்கிய திருக்கோவலுரை ஒட்டி ஒடுவதாலும் சங்கநூல்களில் பெண்ணையாறு இடம்பெற்றுள்ளது. அகநானூற்றிலுள்ள

"துஞ்சா முழவின் கோவல் கோமான்
நெந்தேர்க் காரி கொடுங்கான் மூன்றுறைப்
பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கும்."

என்னும் (35) பாடல் பகுதியிலும், புறநானூற்றிலுள்ள

"நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே"

என்னும் (126) பாடல் பகுதியிலும் பெண்ணையாற்றைக் கண்டு கண் குளிரலாம். சங்ககாலத்திற்குப் பின்னும் தேவாரம், பெரியபுராணம் முதலிய பல்வேறு இலக்கியங்களிலும் பெண்ணையின் பெருமை பெரிதும் பேசப்பட்டுள்ளது. கெடிலம் போலவே பெண்ணைக்கும் தெய்வநெறிப் பெருமை உண்டு.

சங்க காலத்தில் மலாடு எனப் பெயர் பெற்றிருந்த திருமுனைப்பாடி நாட்டை, திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு மலையமான் மரபினர் ஆண்டு வந்தனர். அம் மரபினருள் சிறந்தவன் திருமுடிக்காரி. அவனைப் புகழ்ந்து பாடிய சங்கப் புலவர்கள் சிலர் கோவலூரையும் பெண்ணையாற்றையுங் கூடப் புகழ்ந்துள்ளனர். ஆனால் கெடிலத்தைப் பற்றிச் சங்கப் புலவர் எவரும் பாடவில்லை. காரணம்: பெண்ணையாறு பெரியதாய்த் திருக்கோவலூருக்கு அருகிலேயே ஒடுவதும், கெடிலம் சிறியதாய்த் திருக்கோவலூருக்குத் தெற்கே 8 கி.மீ. (5 மைல்) தொலைவில் ஒடுவதும் ஆகும். அவ்விடத்திற்கு மேற்கே சில கல் தொலைவிலிருந்துதான் கெடிலம் தோன்றி வருகிறது. ஆதலின், அவ்விடத்தில் அது சிறியதாய்த்தானே இருக்க முடியும்? மற்றும், பக்கத்தில் பெரிய பெண்ணையாறு இருப்பதால் இதன் பெருமை அங்கே அடிபட்டுப் போயிற்று.

இருப்பினும், கெடிலம் திருக்கோவலூருக்கு மிக அண்மையில் சில கல் தொலைவிற்குள்ளேயே ஒடுவதாலும், அங்கே தன் குறுக்கே கட்டப்பட்டுள்ள புத்தனேந்தல்