பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18. பாசனமும், பயிரும்
அணைக்கட்டுகள்

பாசனம்

ஆற்றுப்பாசனம் பெரும்பாலும் அணைக்கட்டுகளின் வாயிலாக நடைபெறுகிறது. கெடில ஆற்றின் குறுக்கே பல் வேறிடங்களில் பாசனத்திற்குப் பயன்படும் ஐந்து அணைக்கட்டுகள் உள்ளன, அவை முறையே முகலாற்று அணை, புத்தனேந்தல் அணை, திருவதிகை அணை, வானமாதேவி அணை, திருவயிந்திரபுரம் அணை என்பனவாம். இவற்றுள் முதல் இரண்டு அணைகளும் திருக்கோவலூர் வட்டத்திலும் இறுதி மூன்று அணைகளும் கடலூர் வட்டத்திலும் உள்ளன. இவ்வைந்தனுள் இறுதி மூன்றுமே சிறந்தவை - பழமையானவை.

1. முகலாற்று அணை

மேற்கே திருக்கோவலூர் வட்டத்தின் தொடக்கப் பகுதியில் இந்த அணை உள்ளது. அருங்குறுக்கை என்னும் ஊருக்கு மேற்கே 3 கி.மீ. தொலைவில் முகலாறு என்னும் ஊருக்கு அருகில் சிறிய அளவில் ஒரு தடுப்பு போல் இந்த அணை அமைக்கப்பட்டுள்ளது. சீரழிந்த நிலையிலுள்ள இச் சிறு அணையால் பெரும் பயன் இல்லை. அணை என்ற பெயரளவில் இருக்கிறது இது.

2. புத்தனேந்தல் அணை

இது, திருக்கோவலூர் வட்டத்தில் திருக்கோவலூருக்குத் தென்கிழக்கே ஏறக்குறைய 15 கி.மீ. தொலைவில் புத்தனேந்தல் என்னும் ஊர் எல்லையில் உள்ளது. ஆற்றின் தென்கரையில் புத்தனேந்தல் ஊர் இருக்கிறது. இங்கே இயற்கையாகவே கெடிலத்தின் குறுக்கே அணைத்தடுப்புபோல் பாறைகள் உயர்ந்துள்ளன. அந்தக் குறுக்குப் பாறைத் தடுப்பு ஒரு சிறிய அணை போல் சிறிய அளவில் பயன் தந்து வந்தது. இங்கே ஆற்றிற்குத் தென்பால் தாமல் என்னும் ஊர் இருப்பதால் தாமல் அணை எனச் சிலரும், வடபால் மேமாளூர் என்னும் ஊர் இருப்பதால் மேமாளூர் அணை எனச் சிலரும் அழைத்து வந்ததும்