பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாசனமும் பயிரும்-அணைக்கட்டுகள்

251


கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, திருப்பாதிரிப் புலியூரிலிருந்து தெற்கே ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள வண்டிப் பாளையம் வருவதற்கு ஏழு வாய்க்கால் பாலங்களைக் கடந்தாக வேண்டும்.

இந்தப் பகுதியை வற்றாத வளம் உடையதாகவும், கண்ணுக்கு இனிய காட்சி தருவதாகவும் செய்து கொண்டிருக்கிற பெருமை, திருவயிந்திரபுரத்து அணையினுடையதே. கடைசி அணையும் இதுதான்! முதலாவது அணையும் இதுதான். இதற்குங் கிழக்கே கெடிலம் கடலோடு கலக்கிற வரைக்கும் இடையே வேறு அணை இல்லாததால் இது கடைசி அணை எனப்பட்டது. முதல் அணையும் இதுதான் என்பது எப்படி? புத்தனேந்தல் அணை 1953ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அதற்கும் 90 ஆண்டுகளுக்குமுன் 1862 - 1863இல் வானமாதேவி அணை அமைக்கப்பட்டது. அதற்கும் 15 ஆண்டுகளுக்கு முன் 1847 - 1848இல் திருவதிகை அணை உருவாக்கப்பட்டது. அதற்கும் 12 ஆண்டுகளுக்குமுன் 1835 - 1836இல் இந்தத் திருவயிந்திரபுரம் அணை கட்டப்பட்டதால், இது முதலாவது அணை என்னும் பெருமைக்கு உரியதாயுள்ளது. மற்றும், கெடிலத்தின் அணைகளுள், ஏனைய அணைகளினும் இந்த அணைதான், அணை கட்டுவதற்கு ஏற்ற இயற்கைச் சூழ்நிலை மிக்கது என்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

திருவயிந்திரபுரம் அணைப் பகுதிக்கும் திருவதிகை அணைப் பகுதிக்கும் இடைப்பட்ட தொலைவு 14 கி.மீ. அளவாகும். இந்தக் குறுகிய தொலைவிற்குள் வானமாதேவி அணை உட்பட மூன்று அணைகள் இருப்பதைக் காண்கிறோம். மூன்றனுள், மேல் புறத்தில் உள்ள திருவதிகை அணை 523 அடி நீளமும், இடையிலுள்ள வானமாதேவி அணை, முன்னையதினும் 17 அடி குறைவாக 506 அடி நீளமும், இறுதியில் கீழ்பால் உள்ள திருவயிந்திரபுரம் அணை, தனக்குமுன் உள்ளதினும் 70 அடி குறைவாக 436 அடி நீளமும் உடைத்தாயிருப்பது, கெடிலம் கீழ் நோக்கி வரவர அகலத்தில் சுருங்குகிறது என்பதை அறிவிக்கிறது. ஆறுகள் தோன்றும் இடத்தில் சிறுத்தும் நடுவில் பெருத்தும் முடிவில் மீண்டும் சிறுத்தும் போவது பொது இயல்பு தானே! கங்கையென்ன காவிரியென்ன - அவையும் இப்படித் தானே! கெடிலம் மட்டும் இதற்கு விதிவிலக்கா? ஆனால், கங்கையும் காவிரியும் முடிவில் சிறுத்துப் போகும் விகித அளவுக்குக் கெடிலம் முடிவில் சிறுக்கவில்லை.

கடலூர் வட்டத்திற்குள் உள்ள இந்த மூன்று அணைகளாலும் ஏறக்குறைய 8,500 ஏக்கர் நிலங்கள் பாசன