பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாசனமும் பயிரும்-அணைக்கட்டுகள்

255


விளைகிறது. இங்கே மிகுதியாக விளையும் ஒரு சிறப்போடு நின்று விடவில்லை; இங்கே விளையும் மணிலா ஏனைய இடங்களில் விளைவதனினும் மிக்க தரமும் உடையது. எனவே, மணிலா விளைச்சலில் இம் மாவட்டம் அளவு (Quantity), தரம் (Quality) என்னும் இருவகையாலும் சிறந்தது எனலாம். ‘மணிலாக்கொட்டை மாவட்டம்’ அல்லவா?

பதினெட்டாம் நூற்றாண்டில் வெள்ளையரால் தொடங்கப் பெற்ற மணிலாப் பயிர், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து இன்று இம் மாவட்டத்தின் செல்வச் செழிப்பிற்கு வழி செய்துள்ளது. இம்மாவட்டத்தில் மணிலா எண்ணெய் ஆலைகள் பல உள்ளன. மணிலா விளைவைப் பெருக்க அரசு நல்ல திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. திண்டிவனம் ஆராய்ச்சிப் பண்ணை இந்தத் துறையில் செய்யும் பணி பாராட்டற்பாலது. பாரத அரசு 25 நூறாயிரம் ரூபாய் செலவில் மணிலா ஆராய்ச்சிப் பண்ணைக்கு ஏற்பாடு செய்துள்ளது. மொத்தத்தில் தென்னார்க்காடு மாவட்டத்தில் நெற்களஞ்சியமாகிய சிதம்பரம் வட்டம் தவிர மற்ற வட்டங்கள் யாவும் மணிலாப் பயிரால் பெரும் பயன் பெற்று வருகின்றன.

பிற பயிர்கள்

இப் பகுதியில் எள், உளுந்து, காராமணிப் பயறு, கேழ்வரகு முதலியவை தனியே பயிரிடப் படுவதன்றி மணிலாவுடன் ஊடு பயிராகவும் விளைவிக்கப்படுகின்றன. பல இடங்களில் கம்பும் பயிரிடப் படுகிறது. முன்பெல்லாம். கம்பும் கேழ்வரகும் கலந்து ஆக்கிய கூழ்தான் பகல் உணவாக இருந்தது; இரவில்தான் மக்கள் அரிசிச்சோறு உண்டு வந்தனர். இப்போது காலை, நண்பகல், மாலை, இரவு, இவற்றின் இடைவெளிகள் ஆகிய எல்லா வேளைகளிலும் நாகரிக வளர்ச்சி என்னும் பேரால் அனைவரும் அரிசி உணவையே நாடுகின்றனர்.

கெடிலக்கரைப் பகுதியில் தென்னைக்கு வண்டிப் பாளையம் வட்டாரமும், பலாவுக்குப் பண்ணுருட்டி வட்டாரமும், முந்திரிக்குக் கேப்பர் மலை வட்டாரமும் பண்ணுருட்டி வட்டாரமும், வெற்றிலைக்கும் கரும்புக்கும் நெல்லிக்குப்பம் வட்டாரமும், மணிலாக் கொட்டைக்கு எல்லா வட்டாரங்களும் பேர் பெற்றவையாய்த் திகழ்கின்றன.