பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறுகளின் தோற்றமும் நீளமும்

25


வட்டத்தில் தோன்றித் தமிழ்நாட்டில் வந்து முடிபவை; எனவே, இவையிரண்டும் முன்னைய இரண்டினும் நீளமாயுள்ளன. காவிரியோ, குடகுநாட்டில் தோன்றி மைசூர்நாட்டுள் புகுந்து கடந்து தமிழ்நாட்டில் வந்து முடிகிறது; எனவே, இது, முன்னைய நான்கினும் மிகவும் நீளமாயுள்ளது.

தாமிரவருணி, வையை என்னும் ஈராறுகளை மட்டும் எடுத்துக்கொள்ளினும், இரண்டுமே மேற்குத்தொடர்ச்சி மலையில் தோன்றினாலுங்கூட, வையையாறு மதுரை மாவட்டத்தில் தோன்றி இராமநாதபுர மாவட்டத்தில் முடிகிறது. தாமிரவருணியோ, திருநெல்வேலி மாவட்டத்தில் தோன்றி அதே மாவட்டத்திலேயே முடிந்து விடுகிறது. அதனால்தான், வையையினும் தாமிரவருணி நீளத்தில் குறைவாயுள்ளது.

இதிலிருந்து, இந்தியப் பெருநிலத்திலேயே, அகன்ற வடபகுதியில் உள்ள ஆறுகளினும் குறுகிய தென்பகுதியில் உள்ள ஆறுகளின் நீளம் குறைவு என்பதும், தென் பகுதியிலும் பல மாநிலங்களில் ஓடும் ஆறுகளினும் ஒரு மாநிலத்தில் மட்டும் ஓடும் ஆறுகள் நீளக் குறைவானவை என்பதும், ஒரு மாநிலத்திற்குள்ளும் பல மாவட்டங்களில் ஓடும் ஆறுகளைவிட ஒரு மாவட்டத்தில் மட்டும் ஓடும் ஆறுகளின் நீளம் குறைவு என்பதும் புலப்படும். புலப்படவே, ஒரு மாவட்டத்தின் மேற்குக் கோடியிலிருந்து கிழக்குக்கோடிவரையும் ஓடிக் கடலில் கலக்கும் தாமிரவருணி போன்ற ஆற்றைக் காட்டிலும், ஒரு மாவட்டத்தின் நடுப்பகுதியில் தோன்றிக் கடலில் கலக்கும் ஓர் ஆறு மிகச் சிறியதாய்த்தான் இருக்கமுடியும் என்பதும் உடன் புலனாகும். அப்படி உள்ள ஓர் ஆறுதான் ‘கெடிலம்’ என்னும் ஆறு.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்

[1]'உடல் சிறியர் என்றிருக்கவேண்டா’ என்பது ஔவைமொழி. [2]உருவுகண்டு எள்ளாமை வேண்டும்’ என்பது வள்ளுவர் வாய்மொழி. இம்மொழிகள் கெடில ஆற்றிற்கு மிகவும் பொருந்தும். ‘மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது,


  1. மூதுரை.
  2. 'திருக்குறள் - 667.