பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

கெடிலக்கரை நாகரிகம்


(3) விருத்தாசலம் சந்திப்பு நோக்கிச் செல்வது; (4) வேலூர் - காட்பாடி பக்கம் செல்வது (5) புதுச்சேரிக்குச் செல்வது. பல பக்கங்கட்கும் செல்லும் பெரிய சந்திப்பு ஆதலின் விழுப்புரம் சந்திப்பு இன்றியமையாததாய்க் கருதப்படுகிறது.

கூடலூர்ச் சந்திப்பிலிருந்து நான்கு பாதைகள் பிரிகின்றன. அவை: (1) விழுப்புரம் செல்வது; (2) மாயவரம் செல்வது; (3) நெய்வேலி வழியாக விருத்தாசலம் செல்வது, (4) கூடலூர்த் துறைமுகத்திற்குச் செல்வது. இந்தக் கூடலூர்ச் சந்திப்பு, தன் அருகில் துறைமுகம் உடைமையாலும், நிலக்கரி தோண்டும் நெய்வேலியைப் பக்கத்திலே உடைமையாலும் மிகவும் இன்றியமையாததாய் மதிக்கப்படுகிறது.

விருத்தாசலம் சந்திப்பிலிருந்து கூடலூருக்கு ஒரு பாதையும், திருச்சிக்கு ஒரு பாதையும் சேலத்திற்கு ஒரு பாதையுமாக மூன்று பாதைகள் பிரிகின்றன. அண்மையில் நெய்வேலி நிலக்கரித் திட்டம் செயல் படுவதால் இந்தச் சந்திப்பும் இன்றியமையாமை பெற்று வருகிறது.

மற்றும், நெய்வேலிப் புகைவண்டி நிலையத்திலிருந்து நெய்வேலிக்குள்ளே பொறிகளையும் பொருள்களையும் கொண்டு போவதற்காக 8 கி.மீ. தொலைவு அளவிற்கு ஒரு குறும்பாதை அமைக்கப்பட்டுள்ளது. புகைவண்டி நிலையமே இல்லாது கிடந்த நெய்வேலி, தன் நிலக்கரித் திட்டத்தால், 1961 ஆம் ஆண்டு ஆறு நூறாயிரம் (6 இலட்சம்) ரூபாய் அளவு பெறுமானமுள்ள புகைவண்டி நிலையக் கட்டடங்களைப் பெற்றிருப்பது பெருவியப்பிற்குரியது.

அடுத்து, கடலூர் வட்டத்தில் கூடலூர்ச் சந்திப்பு இருந்தாலும், அதன் வடக்கே அடுத்தாற்போல் உள்ள திருப்பாதிரிப் புலியூர்ப் புகைவண்டி நிலையம் கூடலூர் நிலையத்தினும் ஒருவகையில் சிறப்புடையதாகும். திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன்கோயிலுக்கும், திருவயிந்திரபுரம் திருமால் கோயிலுக்கும், மஞ்சக்குப்பம் புதுப்பாளையம் பகுதியிலுள்ள மாவட்டத் தலைநகர்த் தலைமைச் செயலகங்கட்கும் செல்பவர்கள் திருப்பாதிரிப் புலியூர்ப் புகைவண்டி நிலையத்தில் தான் இறங்கவேண்டும். இங்கே விரிவான கட்டடங்களும் மேம்பாலமும் உண்டு. தெற்கேயிருந்து வந்து கூடலூர்ச் சந்திப்போடு முடிந்து நின்றுவிட வேண்டிய வண்டிகள், கூடலூர்ச் சந்திப்பைத் தாண்டித் திருப்பாதிரிப் புலியூருக்கும் வந்துதான் பின்னர் ஒருமுறை கூடலூர்ச் சந்திப்புக்குச் சென்று நின்று தங்கிவிடும். அதேபோல், முதல் முதலாகக் கூடலூர்ச்