பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20. கூடலூர்த் துறைமுகம்

பெரிய துறைமுகங்களில் பெரும்பாலும் கப்பல்கள் கரையை யொட்டித் துறைமுகப் பகுதியிலேயே நிற்கும். சிறிய துறைமுகங்களிலோ, கரைக்கு வெகு தொலைவில் கடல் நடுவே கப்பல்கள் நின்றுகொண்டிருக்கும். பெரிய துறைமுகங்களில் கரைக்கும் கப்பலுக்குமாகப் பொறிகளின் துணைகொண்டு அப்படியே சரக்குகளை ஏற்றவும் இறக்கவும் செய்யலாம்; சென்னைத் துறைமுகத்தில் இப்படி நடப்பதை நேரில் காணலாம். ஆனால், சிறிய துறைமுகங்களிலோ, கரையோரத் துறைமுகப் பகுதிக்கும் - கடல் நடுவே நிற்கும் கப்பல்களுக்கும் இடையே படகுகள் தூதுபோய் வரும். படகுகளின் வாயிலாகவே சரக்குகளின் ஏற்றுமதி இறக்குமதி நடைபெறும்.

சிறிய துறைமுகங்களிலும் பல வகையுண்டு. கடற் கரையிலிருந்து படகுகள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு கப்பலுக்குச் செல்வதும், அதேபோல் கப்பலிலிருந்து ஏற்றிக்கொண்டு கரைக்கு வருவதுமாக உள்ளது ஒருவகை. இத்தகைய இடங்களில் கரைக்கும் படகுக்குமாகச் சில அடி தொலைவாயினும் சரக்குகளைக் கைகளால் தூக்கிக்கொண்டு கால்களால் நடந்து போகவும் வரவும் வேண்டும். மற்றும், சரக்குகளின் கனத்துடன் கரையின் மணற்பகுதிக்கும் - ஒரளவு ஆழமான தண்ணிர்ப் பகுதிக்குமாகப் படகுகளை நகர்த்திக்கொண்டு போவதற்கும் வருவதற்கும் மனித முயற்சி பெரிதும் தேவைப்படுகிறது. இந்த நிலைமையைக் காரைக்கால் துறைமுகம் போன்றவற்றில் காணலாம். (காரைக்காலில் மழைக்காலத்தில் மட்டும் அரசலாற்றின் வாயிலாய்ப் போக்குவரவு நடைபெறுவதுண்டு. மற்ற காலத்தில் முகத் துவாரம் அடைபட்டுவிடும்). இன்னன சிறிய துறைமுகங்களுக்குள் மிக மிகச் சிறிய வசதி குறைந்த துறைமுகங்களாம். இந்த வசதிக் குறைவைப் போக்குவதற்காக, கரையிலிருந்து கடலுக்குள் ஒரளவு தொலைவு வரையும் இரும்புப் பாலம் கட்டி ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படுகின்ற துறைமுகங்கள் மற்றொருவகை. இது செயற்கை முறைதான். இந்த நிலைமையைப் புதுச்சேரித் துறைமுகம், தூத்துக்குடித் துறைமுகம் முதலியவற்றில் காணலாம். இந்தப் பாலத்தின் முடிவில் கீழே கடலில் படகுகள்