பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

கெடிலக்கரை நாகரிகம்


கோலாட்ட நடனச்சிற்பம் காணத்தக்கது. இங்கே ஏகாதசி விழா மிகச்சிறந்த முறையில் நடைபெறுகிறது. திருக்கோவலூர்ப் பெருமாள் மாசி மகத்தன்று கூடலூர்க் கடற்கரைக்கு வந்து நீராடிச் செல்வார். பெருமாள் கோயிலில் சித்திரைத் திங்களில் பத்துநாள் பெருவிழா நடத்தப்படுகிறது.

பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்க்கும் பிறர்க்கும் போர் நடந்தபோது, திருவிக்கிரமப்பெருமாள் கோயில் ஒரு போர்க்கோட்டையாகப் பயன்படுத்தப்பட்டது. 1758ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இதனை எடுத்துக் கொண்டனர். 1760 ஆம் ஆண்டு மைசூர் ஐதர் அலியின் படைகளின் தாக்குதல்களி லிருந்து இதனைக் காப்பாற்றவும் செய்தனர். திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மெய்ப்பொருள் (நாயனாரின்) வேந்தரின் கோட்டை இந்தக் கோயில் இருக்கும் பகுதியில்தான் இருந்தது என்றும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது. முதல் கிழக்குக் கோபுரத்தை ஒட்டியுள்ள தெரு ‘கோட்டைத்தெரு’ என்று அழைக்கப்படுவது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

இந்தக்கோயில் ஒரு காலத்தில் சமணக்கோயிலாக இருந்தது என்று ஒரு சிலராலும், சைவக்கோயிலாக இருந்தது என்று வேறு சிலராலும் கூறப்படுகிறது. இந்தப் பிணக்கு ஏன்? திருவிக்கிரமப் பெருமாள் கோயில் திருமால் கோயிலாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே! ஒருவனே தேவன்!

கீழுர்

திருக்கோவலுரரின் கிழக்குப்பகுதி கீழுர் ஆகும்; இது கீழையூர், கீழவூர் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு சிற்றுார் (கிராமம்) போன்ற இப்பகுதியில் சிவன் கோயில் இருக்கிறது. கோயில் பெயர் வீரட்டானம் என்பது. சிவன் பெயர் வீரட்டானேசுவரர்; அம்மன் பெயர் சிவாநந்தவல்லி. சிவபெருமான் வீரச் செயல்கள் நிகழ்த்திய எட்டுத் திருப்பதிகளுள் (அட்ட வீரட்டங்களுள்) இந்த ஊரும் ஒன்று. சிவன் இங்கே அந்தகாசுரன் என்னும் அரக்கனை அழித்து மறச்செயல் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்பதி, நாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகியோரின் தேவாரப் பதிகங்களும், அருணகிரியாரின் திருப்புகழும் பெற்ற பெருமையுடையது. சுந்தரரும் வேறு ஊர்ப்பதிகங்களில் திருக்கோவலூரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இவ்வூர்க்குப் புராணமும் உண்டு. கோவல் வீரட்டநாதரின் திருக்கோயிலைப் பின்வரும் படத்தில் காணலாம்.