பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298

கெடிலக்கரை நாகரிகம்


கள்ளக்குறிச்சி, திருவெண்ணெய் நல்லூர், விழுப்புரம் ஆகிய ஐந்து பகுதிகளை நோக்கி, பெருநாட்டு நெடுஞ்சாலையும், மாநில நெடுஞ்சாலையும், மாவட்ட நெடும்பாதையும், மாவட்டக் குறும்பாதையுமாக ஐந்து சாலைகள் பிரிந்து செல்வதைக் கொண்டு, போக்குவரவுத் துறையில் இவ்வூர் பெற்றிருக்கும் இன்றியமையாமையைப் புரிந்து கொள்ளலாம். இச்சாலைகளேயன்றி, நெய்வேலிக்கும் இவ்வூர்க்குமாக ஒரு பெரிய நெடுஞ்சாலை அமைக்கும் முயற்சி இப்போது நடைபெற்று வருகிறது. இவ்வூரில் விண்ணுர்தி நிலையம் இருப்பதாலும், அண்மையில் நெய்வேலி நிலக்கரித் திட்டம் நடைபெறுவதாலும், எதிர்காலத்தில் இவ்வூரின் வளர்ச்சி மிகப் பெரியது என்பது புலனாகும்.

ஒரு வணிக நிலையமுமாக இருக்கிற இவ்வூர் வழியாக இப்போது நடைபெறும் பேருந்து வண்டி (பஸ்), பேருந்து சுமை வண்டி (லாரி) ஆகியவற்றின் போக்குவரவுக்கு அளவேயில்லை.

உலகியல் துறையிலன்றிச் சமயத்துறையிலும் உளுந்துர்ப் பேட்டை பின்வாங்கிவிடவில்லை. இங்கே சிவன் கோயில் ஒன்றும் இருக்கிறது. ‘முன்னொரு காலத்தில் ஒரு மிளகு வணிகன் மிளகு மூட்டையுடன் இங்கு வந்தான். இஃது என்ன முட்டை என்று ஒருவன் கேட்டான். உளுந்து மூட்டை என்று வேடிக்கையாக வணிகன் பொய் சொன்னான். ‘அஃது அப்படியே யாகுக’ என்று மற்றவன் கூறினான். அவ்வாறே மிளகு முட்டை உளுந்து மூட்டையாயிற்று. அப்படி ஆக்கிய பேர்வழி சிவன்தான். இது சிவனது திருவிளையாடல் என உணர்ந்த வணிகன் அங்கே சிவனுக்குக் கோயில் கட்டி வழிபாடு செய்தான்.’ இப்படியொரு கதை சொல்லப்படுகிறது. உளுந்துார்ப்பேட்டை என்னும் பெயருக்கு ஏதேனும் காரணம் வேண்டுமல்லவா?

இவ்வளவு சிறப்பிற்குரிய உளுந்துர்ப்பேட்டை, உளுந்துர்ப் பேட்டை ஊராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைநகராயிருப்பதில் வியப்பில்லை. இந்த ஒன்றியம் வடக்கே கெடிலக்கரை வரைக்கும் பரந்துள்ளது; எனவே, கெடிலக்கரை நாகரிகத்தில் உளுந்துர்ப் பேட்டைக்கும் தக்க பங்கு உண்டு.

மலட்டாற்றங்கரை ஊர்கள்

திருக்கோவலூர் வட்டத்தில் பெண்ணையாற்றின் தென்கரையிலிருந்து பிரியும் மலட்டாற்றின் தென்கரையில் அடுத்தடுத்தாற்போல் மேற்கு - கிழக்காக இடையாறு. திருவெண்ணெய் நல்லூர், முண்டீச்சுரம் (கிராமம்) என்னும்