பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/300

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை ஊர்கள்

299


மூன்று சைவத்திருப்பதிகள் உள்ளன. இம் மூன்றுமே திருவெண்ணெய் நல்லூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்தவை.

இம்மூன்று ஊர்களும் மலட்டாற்றின் கரையில் இருந்தாலும், இவற்றிற்குத் தென்மேற்கே முறையே 6, 8, 10 கி.மீ. தொலைவிற்குள் கெடிலம் ஆறு ஓடுதலாலும், இவ்வூர்களின் பக்கத்தே ஒடும் மலட்டாறு ஒரு துணை ஆறாய்க் கெடிலத்தில் போய் விழுந்து கலப்பதால் மலட்டாறு கெடிலத்தின் ஒர் உறுப்பாய்க் கருதப்படுதலானும், மலட்டாற்றங் கரையிலுள்ள இவ்வூர்கள் ‘கெடிலக்கரை நாகரிகம்’ என்னும் இந்நூலில் இடம்பெறுவதற்கு முழு உரிமையும் உடையனவாகும். இனி முறையே ஒவ்வொன்றினையும் பற்றிய விவரங்கள் வருமாறு:

இடையாறு

இவ்வூர், திருவெண்ணெய் நல்லூர் (ரோடு) புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கே 1 கி.மீ. தொலைவில் திருவெண்ணெய் நல்லூர் ஊருக்கு வடமேற்கே 5 கி.மீ. தொலைவில் மலட்டாற்றின் தென்கரையில் இருக்கிறது. இவ்வூருக்குத் தென்மேற்கே 6 கி.மீ. தொலைவில் கெடிலம் ஒடுகிறது. கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதை வழியே செல்லும் பேருந்து வண்டியில் பயணம் செய்தால், இவ்வூர்ச் சிவன் கோயிலின் வடக்கு மதிற்புறமாக இறங்கலாம். இவ்வூருக்கு ஏனாதிமங்கலம் என்னும் பெயரும் உண்டு. ஏனாதிப் பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசரால் அளிக்கப்பட்ட ஊராக இருக்க வேண்டும். இங்கே மலட்டாற்றின் குறக்கே சிறு அணை ஒன்று உளளது.

இடையாறு சுந்தரரின் பாடல் பெற்ற பதியாகும். இறைவன் பெயர்: இடையற்றீசன்; அம்மன் பெயர்; சிற்றிடைநாயகி. இங்கே கல்வெட்டுக்கள் உள்ளன. கல்வெட்டில், கோயிலின் பெயர் மருதந்துறை எனச் சொல்லப்பட்டுள்ளது.

திருவெண்ணெய் நல்லூர்

இவ்வூர், திருவெண்ணெய் நல்லூர் (ரோடு) புகை வண்டி நிலையத்திற்கு மேற்கே 6 கி.மீ. தொலைவில் மலட்டாற்றின் தென்கரையில் இருக்கிறது. இவ்வூருக்குத் தென்மேற்கே 8 கி.மீ. தொலைவில் கெடிலம் ஒடுகிறது. திருவெண்ணெய் நல்லூர், திருக்கோவலூருக்குத் தென் கிழக்கே 22 கி.மீ. தொலைவிலும் விழுப்புரத்திற்குத் தென்மேற்கே 19 கி.மீ. தொலைவிலும் பண்ணுருட்டிக்கு வடமேற்கே 24 கி.மீ. தொலைவிலுமாக