பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/304

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை ஊர்கள்

303


போது, இப்போதுள்ள மலட்டாறு பெண்ணையிலிருந்து பிரியும் இடத்திற்கு அண்மையில் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப்பின், பெண்ணை வடக்கு நோக்கி வளைந்து வேறு புதிய பாதை வகுத்துக் கொண்டது. அதிலிருந்து தொடர்ந்து புதிய பாதையிலேயே இன்றுவரையும் ஒடிக் கொண்டிருக்கிறது. பெண்ணைக்குத் தெற்கே இப்போதுள்ள மலட்டாறு என்பது பெண்ணையின் பழைய பாதையாகும். பெண்ணை தன் பழைய பாதையில் ஒடிக் கொண்டிருந்த போது அதனையொட்டிய தென்கரையில் இடையாறு, திருவெண்ணெய் நல்லூர், முண்டீச்சுரம் முதலிய ஊர்கள் இருந்ததால், ‘பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர்’ எனச் சுந்தரர் பாடினார். இப்போது பெண்ணையின் பழைய பாதை, மலட்டாறு என்னும் பெயரில் தண்ணிர் வளமின்றிக் காட்சியளிக்கிறது. இந்தக் கருத்துதான் பொருத்தமானதாகும். இதற்கு மறுக்க முடியாத சான்று ஒன்று உள்ளது.

சுந்தரர் திருத்துறையூரில் இறைவனை வழிபட்டு, அங்கிருந்து தெற்கேயுள்ள,திருவதிகைக்குப் பெண்ணை யாற்றைக் கடந்து சென்றார் என்று பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் பெரிய புராணத்தில் தெரிவித்துள்ளார். [1]


திருத்துறையூர் தனைப்பணிந்து.......
...பெண்ணையாறு கடந்தேறியபின்........

.......திருவதிகைப் புறத்தணைந்தார்"

என்பது பெரியபுராணப் பாடற் பகுதி. இதிலிருந்து, திருத்துறையூருக்குத் தெற்கே பெண்ணையாறு இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகும். ஆனால், இப்போது திருத் துறையூருக்கு வடக்கே பெண்ணை ஒடுகிறது. எனவே, இப்போது திருத்துறையூருக்குத் தெற்கேயுள்ள மலட்டாற்றுப் படுகைதான் பெண்ணையின் பழைய பாதை என்பது புலனாகும். இந்தக் கருத்தை மலட்டாற்றங்கரை மக்களும் ஒத்துக் கொள்கின்றனர். ஆகவே, அன்றிருந்த சூழ்நிலையில் சுந்தரர் ‘பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர்’ எனப் பாடியிருப்பது பொருத்தமானதே. பெண்ணையின் பழைய பாதையாகிய மலட்டாற்றுப் படுகை கிழக்கு நோக்கி செல்லச் செல்லத் தேய்ந்து மறைகிறது. அந்தப் படுகையிலிருந்து தெற்கு நோக்கிப் பிரியும் பகுதி திருவாமூருக்கு அண்மையில் கெடிலத்தோடு கலக்கிறது.


  1. *பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம்: 81, 82.