பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310

கெடிலக்கரை நாகரிகம்



திருநாவலூர்

ஒரு காலத்தில் முனையரையர் மரபு மன்னர்களின் தலைநகராயிருந்ததும், இப்போது திருநாவலுர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைநகராயிருப்பதும் ஆகிய திருநாவலூர், பண்ணுருட்டிக்கு மேற்கே 16 கி.மீ. தொலைவில் கெடிலத்தின் வடகரையில் உள்ளது. கடலூரிலிருந்து திருக்கோவலூருக்குச் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்கள். பண்ணுருட்டிக்கு மேற்கே 11 கி.மீ. தொலைவில், அந்நெடுஞ்சாலையிலிருந்து தென்புறமாக ஒரு மாவட்டக் குறும்பாதை பிரிவதைக் காணலாம். அங்கிருந்து அப்பாதை வழியே 3 கி.மீ. தொலைவு சென்றால் திருநாவலூரை அடையலாம். இந்த மாவட்டக் குறும்பாதை வடமேற்கு நோக்கி வளைந்து, சென்னை - திருச்சி பெருநாட்டு நெடுஞ் சாலையைக் கடந்து பரிக்கல் வழியாகத் திருவெண்ணெய் நல்லூர் செல்கிறது. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையிலிருந்து அம் மாவட்டக் குறும்பாதையில் கிழக்கு நோக்கி 3 கி.மீ. தொலைவு சென்றால் திருநாவலூரை அடையலாம். இவ்வூர் சேந்தமங்கலத்திற்கு அண்மையில் உள்ளது. முன் சேந்தமங்கலம் என்னும் தலைப்பில் சேந்தமங்கலத்தை அடைவதற்குக் கூறப்பட்டுள்ள வழி விவரங்களைத் திருநாவலூரை அடைவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். மாநில நெடுஞ் சாலைக்கும் பெருநாட்டு நெடுஞ்சாலைக்கும் இடையே திருநாவலூர் வழியாகப் பேருந்து வண்டிகள் செல்கின்றன. பேருந்துப் பாதையை ஒட்டினாற்போலவே ஊரும் சிவன் கோயிலும் உள்ளன. புகைவண்டியில் வருபவர்கள், விழுப்புரம் - திருச்சி குறுக்குப் பாதையில் உள்ள பரிக்கல் நிலையத்தில் இறங்கித் தென்கிழக்காக 3 கி.மீ. சென்றால் நாவலூரை அடையலாம்.

பண்டு நாவல் மரம் நிறைந்திருந்ததால் நாவலூர் என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், பேச்சு வழக்கில் திருநாம நல்லூர் என்னும் பெயரே பெருவாரியாக அடிபடுகிறது.

சைவ உலகில் திருநாவலூர் மிகவும் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது. சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் நால்வர் பிறந்து வாழ்ந்த ஊர் திருநாவலூர். அந் நால்வர்: சுந்தரமூர்த்தி நாயனார், அந்தச் சுந்தரரின் தந்தை சடைய நாயனார், தாய் இசை ஞானியார், சுந்தரரை எடுத்து வளர்த்தவரும் அப் பகுதியை ஆண்டவருமாகிய நரசிங்க முனையரைய நாயனார் என்பவராவர். நாவலூரில் பிறந்ததால்