பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

கெடிலக்கரை நாகரிகம்


அருகில் கடலில் கலக்கிறது. இதன் பரப்பளவு - 1060 சதுர கி.மீ, மக்கள் தொகை 5,11,400. தலைநகர் கடலூர் (கூடலூர்). இவ் வட்டம் ஆற்று வளமும், கடல் வளமும், நிலக்கரி வளமும் இவை காரணமாகத் தொழில் - வாணிக வளமும், உடையது. பெண்ணையாறு ஓடுவதன்றி, பெண்ணையாற்றிலிருந்து பிரியும் மலட்டாறு கெடிலத்தோடு கலப்பதும் இவ் வட்டத்தில்தான் கேப்பர் மலையும் முந்திரிக்காடும் இவ் வட்டத்தில் உள்ளன.

கடலூர் வட்டத்தில், பாடல் பெற்ற பல பதிகளும், அப்பர் பிறந்த திருவாமூரும், சிவப்பிரகாச சுவாமிகள் அடக்கம் செய்யப்பட்ட நல்லாற்றுரும் இராமலிங்க அடிகளார் அருட்பணி புரிந்த வடலூரும், ஞானியாரடிகள் வாழ்ந்த திருப்பாதிரிப் புலியூரும் தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகராகிய கடலூரும் ஒரு துறைமுகமும் ஒரு புகைவண்டி நிலையச் சந்திப்புமுடைய கூடலூரும், சர்க்கரை ஆலை உள்ள நெல்லிக் குப்பமும், நிலக்கரி வளமும், இடையிடையே புதுச்சேரி மாநிலப் பகுதிகளும், இன்ன பிறவும் இருப்பது இவ் வட்டத்திற்கு மிக்க பெருமையாகும். அப்பர் சமணராக மாறி வாழ்ந்த பாடலிபுத்திரமும் (திருப்பாதிரிப்புலியூரை யொட்டிய பகுதி) ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் பெருந் தலைவலி தந்த கடற்கரையிலுள்ள செயின்ட் டேவிட் கோட்டையும் இவ் வட்டத்தின் வரலாற்று இன்றியமையாமைக்குத் தக்க சான்றுகளாம். இவ் வட்டம் இப்போது நான்கு ஊராட்சி மன்ற ஒன்றியங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.

இனி, கடலூர் வட்டத்தில் கெடிலக்கரையை யடுத்துள்ள இன்றியமையா இடங்களைப் பற்றிய விவரங்கள் வருமாறு:

திருவாமூர்

திலகவதியாரும் திருநாவுக்கரசரும் பிறந்த பெருஞ் சிறப்பிற்குரிய திருவாமூர், கடலூருக்க மேற்கே 35 கி.மீ. தொலைவில் பண்ணுருட்டிக்கு மேற்கே 9 கி.மீ தொலைவில் கெடிலத்தின் வடகரையில் உள்ளது. இவ்வூருக்கு மேற்கே சிறிது தொலைவில் மலட்டாறு கெடிலத்தின் வடகரையில் கெடிலத்தோடு கலக்கிறது; சிறிது தொலைவில் ‘நரியின் ஒடை’ என்னும் பெரிய ஒடை தென்கரையில் கெடிலத்தோடு கலக்கிறது. திருவாமூரை அடைய வேண்டுமெனில், கடலூர் - திருக்கோவலூர் மாநில நெடுஞ் சாலையில் கடலூருக்கு மேற்கே 34 ஆவது கி. மீட்டரில் பண்ணுருட்டிக்கு மேற்கே 8 ஆவது கி.மீட்டரில் இறங்க வேண்டும். பின்னர், அவ்விடத்திலிருந்து தெற்கே ஒரு கி.மீ. தொலைவு அளவுக்கு மண் பாதை வழியே சென்றால் திருவாமூரை அடையலாம். மாநில நெடுஞ்சாலையில்